தேர்தல் வெற்றியுடன் நாட்டின் ஒருமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய ஒருமைப்பாட்டை பலவீனப்படுத்தும் வகையில் ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு துறைகளில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.
தூதுவர் நியமனம் மற்றும் இராஜதந்திர நியமனத்தில் காணப்படும் முறைகேடுகள் ஆராயப்படும். வெளிநாட்டு நியமனங்கள் முழுமையாக மறுசீரமைக்கப்படும்.
வெளிநாட்டு தொழில் வாய்ப்பு விவகாரத்தில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. கடந்த அரசாங்கத்தின் ஒரு சில தீர்மானங்களால் பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ளன.
இவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு. பொறுப்பான அரசாங்கம் என்ற ரீதியில் சவால்களை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளோம்.
தேசிய மக்கள் சக்தியின் வெற்றியுடன் தேசிய ஒருமைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பாரம்பரியமான அரசியல் தரப்பினரை புறக்கணித்து எம்மக்கள் புதிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். மக்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவோம்.
தேர்தல் வெற்றியுடன் ஒருமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய ஒருமைப்பாட்டை பலவீனப்படுத்தும் வகையில் ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுகிறார்கள்.
தேசிய ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் .இடமளிக்க முடியாது என்றார்.