அம்பாறையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின்போது கடமையில் இருந்த பொலிஸார் முறையாக செயற்பட தவறியுள்ளர். இது தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அம்பாறையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்தின்போது உலவு இயந்திரம் கவிழ்ந்து விழுந்ததில் 8பேர் மரணித்துள்ளனர். இந்த சம்பவம் இடம்பெறும்போது அந்த இடத்தில் பொலிஸார் இருந்துள்ளனர்.நீரில் மூழ்கிய மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அருகில் இருந்தவர்கள் பொலிஸாரை கேட்டு கதரியபோதும் பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.அங்கிருந்த பொலிஸார் பாதுகாப்பு தடை ஒன்றை ஏற்படுத்தி இருந்தால், குறித்த உலவு இயந்திரம் பயணித்திருக்காது.
அதேநேரம் அந்த சந்தர்ப்பத்தில் அந்த இடத்தில் அனர்த்த முகாமைத்து நடவடிக்கை செயற்படாமல் இருந்துள்ளது.பொலிஸார் பல மணி நேரம் அந்த இடத்தில இருந்தும் கடற்படையினர் வரும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.
பக்கத்து கிராமத்தில் இருந்தவர்கள் சிலரே உடனடியாக செயற்பட்டு இரண்டு பேரை பாதுகாத்து இருக்கின்றனர். இல்லாவிட்டால் இன்னும் இரண்டு பேர் மரணித்திருக்கும்.
பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அங்கு இருந்த பொலிஸாரை கேட்டுள்ளபோது, பொலிஸில் முறைப்பாடொன்றை தெரிவிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னர் அந்த மக்கள் முறைப்பாடொன்றை முன்வைக்க பொலிஸுக்கு சென்றபோது முறைப்பாட்டை எழுதுவதற்கு ஒரு மணிநேரம் வரை காத்துக்கொண்டு இருந்துள்ளனர். பின்னர் இவர்கள் மத்தரசா பாடசாலையின் அதிபரை கைதுசெய்துள்ளனர்.
ஆனால் இந்த சம்பவம் இடம்பெறும்பாேது அங்கு கடமையில் இருந்த பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தமை தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்பதும் எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதற்கு விடயத்துக்கு பொறுப்பான பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளிக்கையில், குறித்த சம்பவம் தொடர்பில் தேடிப்பார்த்து உரிய விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பேன் என்றார்.