பிரான்சில் சார்சல் நகரில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நாள் – 2024

86 0

பிரான்சு பரிசின் புறநகர் பகுதியான சார்சல் நகரில் மாவீரர் நாள் 2024 நிகழ்வு லெப்.சங்கர் நினைவுத்தூபி முன்பாக சார்சல் தமிழ்ச் சங்கத்தின் ஒழுங்கமைப்பின் கீழ் பிரான்சு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் மிகவும் சிறப்பாகவும் , எழுச்சியாகவும் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பொதுச்சுடரை கார்ஜ் மாநகர உதவி நகரபிதா திரு.டானியல் அவர்களுடன் கார்ஜ் மாநகரசபை உறுப்பினர் திரு.கார்த்திக் சத்தியமூர்த்தி அவர்களும் ஏற்றி வைத்தனர்.

பிரெஞ்சு தேச தேசியக் கொடியை சார்சல் மாநகரசபை முதல்வர் திரு.பற்றிக் கடாட் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை 95 ஆம் பிராந்திய 8 ஆவது தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்தன் கார்லோஸ் பிலான்கோ அவர்கள் ஏற்றிவைத்தார்.மணியோசை ஒலித்ததைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது.

ஈகைச்சுடரினை மாவீரர் லெப்.கேணல் விக்ரர் அவர்களின் சகோதரர் ஏற்றிவைக்க, மலர்வணக்கம் இடம்பெற்றது. 95 ஆம் பிராந்திய 8 ஆவது தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் மார்த்தன் கார்லோஸ் பிலான்கோ அவர்கள், சார்சல் மாநகரசபை முதல்வர் திரு.பற்றிக் கடாட் அவர்கள், கார்ஜ் மாநகர உதவி நகரபிதா திரு.டானியல் அவர்களுடன் கார்ஜ் மாநகரசபை உறுப்பினர் திரு.கார்த்திக் சத்தியமூர்த்தி அவர்களும் வில்லிய லூபெல் மாவட்டச் சபைப் பிரதிநிதி திரு.செட்ரிக் சபுரே அவர்களும், சார்சல் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. டக்ளஸ் அவர்களும், தமிழீழ மக்கள் பேரவை பொறுப்பாளர் திரு.திருச்சோதி அவர்களும், மாவீரர் குடும்ப உறுப்பினர் திரு.ரொனி மரிசலின் அவர்களும் மலர்வளையங்களை வைத்து வணக்கம் செலுத்தினர்.

முக்கிய பிரமுகர்களின் நினைவுரைகளும் இடம்பெற்றிருந்தன.

இந்நிகழ்வைச் சிறப்பிக்க பல பிரான்சு அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அந்த வகையில் சார்சல் பகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. கார்லோஸ் மார்த்தன் பிலான்கோ அவர்களும், சார்சல் மாநகர சபை நகர பிதா திரு. பற்றிக் கடாட் அவர்களுடன் சார்சல் நகரசபை உறுப்பினர்களும், அயல் நகரமான கார்ஜ் நகரசபை உதவி நகரபிதா திரு. டானியல் டுத்தோவுடன் நகரசபை உறுப்பினர் திரு. கார்த்தி சத்தியமூர்த்தி அவர்களும்(தவிர்க்க முடியாதகாரணத்தினால் காரஜ் நகர பிதா கலந்துகொள்ள முடியவில்லை), அயல் நகரமான வில்லிய லூபெல் நகர 95 ம் பிராந்திய சபை உறுப்பினர் திரு. செட்றிக் சபூரே அவர்களும் , இன்னும் பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர் .
முக்கியமாக சார்சல் நகர பிதா அவர்கள் இந்த நினைவு தூபியின் முக்கியத்துவம் சார்சல் நகரத்திற்கும் நகரசபைக்கும் நன்கு விளங்கும் எனவும் இந்த நிகழ்வு தொடர்ந்தும் நகரசபையின் முன்னெடுப்பில் நடக்கும் எனவும் உறுதியளித்து எம்மை கண்கலங்க செய்துவிட்டார் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிகழ்வு மாலை 3 மணிக்கு இனிதே நிறைவுபெற்றது.