முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உதைபந்தாட்டப்போட்டி; முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு அணிகள் வெளியேறின!

280 0

அக்கினிச் சிறகுகள் என்ற பெயரிலான அமைப்பினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் என்ற பெயரில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியிலிருந்து முன்னணி அணிகள் வெளியேறி தமது எதிர்ப்பினை வெளியிட்டிருக்கின்றன.

பல்லாயிரம் தமிழ் உயிர்கள் பலியெடுக்கப்ட்ட வன்னியின் இறுதிப்போர் அவலத்தின் அடையாளமாக முள்ளிவாய்க்கால் கொள்ளப்படுகிறது.உள்நோக்கம் கொண்ட சிலர் முள்ளிவாய்க்கால் அவலத்தினை விளையாட்டு நிகழ்விற்கான அடையாளமாகக் குறிப்பிட்டு திசைதிருப்ப முயற்சித்துவருகின்றனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பிரதம விருந்தினராக பங்கேற்கவுள்ளதாகவும் அறிவித்தல் வெளியாகியிருந்தது.

வன்னியில் நடைபெற்ற இறுதிப்போதில் வாழ்ந்த மக்கள் தங்கள் குடும்பத்திலிருந்து குறைந்தது ஒரு உயிரையாவது பறிகொடுத்திருந்தனர்.இந்தநிலையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் என்ற பெயரில் உதைபந்தாட்டப்போட்டி நடைபெறுவதற்கு மக்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டனர்.

இதன் தொடராக முல்லைத்தீவு சென்.யூட் விளையாட்டுக்கழகம் குறித்த தொடரில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு சுப்பர் ராங் விளையாட்டுக்கழகமும் தனது அணியும் போட்டியை புறக்கணிப்பதாக தெரிவித்திருப்பதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.