தமிழீழ விடுதலைக்காகவும் தமிழர்களின் சுதந்திர அவாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்கள் அனைவரையும் ஒருசேர நினைவேந்தும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 புதனன்று பிரான்சின் புறநகர் பகுதியான நெவர் நகரத்தில் மிகுந்த உணர்வெளிச்சியுடன் நடைபெற்றது.
நிகழ்வின் பொதுச்சுடரினை நெவர் மாவட்ட ஆயர் கிறேகுவார் தோர் (Grégoire Drouot) ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக் கொடியை நெவர் பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. பீற்றர் பிறின்சன் ஏற்றிவைத்தார்.
பிரான்ஸ் நாட்டின் தேசியக் கொடியை நெவர் மாவட்டத்தின் துணை மேயர் மார்ட்டின் மசோயர் (Martine Mazoyer) ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசிய தலைவர் அவர்களின் 2008 மாவீரர் நாள் உரை தொகுப்பு ஒலிக்கவிடப்பட்டது.
தொடர்ந்து மாவீரர்களுக்கான பிரதான சுடரினை மணலாறு பகுதியில் மின்னல் இராணுவ நடவடிக்கையின் போது வீரச்சாவை தழுவிக்கொண்ட வீரவேங்கை டென்சியா அவர்களின் சகோதரர் திரு.டினேஸ் அவர்கள் ஏற்ற சம நேரத்தில் மக்கள் அனைவரும் சுடர் ஏற்றிவைக்க துயிலும் இல்ல பாடல் ஒலிக்கவிடப்பட்டது அனைவரும் மனம் உருகி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன. பேச்சு, நடனம்,கவிதை,பாடல் மற்றும் தமிழ்ச் சோலையில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக பரிசளிப்பு என மிகவும் எழுச்சியாக இடம்பெற்றன. இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலைத் தொடர்ந்து தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற தாரக மந்திரத்தோடு நிகழ்வு நிறைவுபெற்றது.