தஞ்சையில் விவசாயிகள் 6-ந்தேதி உண்ணாவிரதம்

422 0

201607280920179035_6th-farmers-on-hunger-strike-in-Thanjavur_SECVPFசம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி வருகிற 6-ந்தேதி தஞ்சையில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்துவது என தஞ்சையில் நடந்த விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் (94 விவசாய சங்கங்களை உள்ளடக்கியது) மாநில செயற்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டு இயக்கத்தின் மாநில தலைவர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணைத்தலைவர் காவிரி தனபாலன், செயலாளர் ரவீந்திரன், கக்கரை சுகுமாறன், மாரிமுத்து, ஆசைத்தம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தெய்வசிகாமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

குறுவை சாகுபடி நடைபெறாததால் காவிரி டெல்டா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் உள்ள அணைகள் இப்போது நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த சூழ்நிலையிலும் தமிழகத்துக்கு தண்ணீர் விடவில்லை. இதனால் சம்பா சாகுபடி பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் சூழ்நிலை நிலவுகிறது.

எனவே சம்பா சாகுபடிக்கு தண்ணீர் வருமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் காவிரி டெல்டாவில் வறட்சி ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. எனவே சம்பா சாகுபடிக்கு உடனடியாக கர்நாடகம் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படுகிறது. மீத்தேன் திட்டத்தை கைவிடக்கோரியும், விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யக்கோரியும் இந்த போராட்டம் நடைபெறுகிறது.

மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் நிறுவனத்திடம் கடனை வசூலிக்கும் அதிகாரத்தை வழங்கி விவசாயிகளுக்கு நெருக்கடியை தருகிறது. இதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகளை காப்பாற்ற அரசு தவறினால் கூட்டியக்கம் போராட்டம் நடத்தும். இதே போல் மீத்தேன் எரிவாயு குழாய்களை எங்கு பதித்தாலும் அனுமதிக்கமாட்டோம். தடுத்து நிறுத்துவோம்.

மீறினால் குழாய்களை உடைத்தெறிவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.