திருகோணமலை உவர்மலை வாழை முனை( Plantan Point) கீழ் சுற்றுவட்ட வீதி 36 வருடங்களுக்குப் பின்னர் மக்களின் பாவனைக்காக இராணுவத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (01) திறந்து வைக்கப்பட்டது.
பிரித்தானியரின் ஆட்சியின் போது,திருகோணமலை உற்துறைமுகத்தின் பாதுகாப்பிற்கென இயற்கையான கேந்திர தானமான இவ் முனைப்பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டது.
சுதந்திரத்தின் பின்னர் தொடர்ந்தும் இலங்கை இராணுவத்தின் முகாம் இவ்விடத்தில் இயங்கி வருகின்றது.இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த உவர்மலையின் பின்பகுதியான இவ் சுற்றுவட்ட வீதி திறந்து வைக்கப்பட்டுள்ளமையின் மூலம் உவர்மலை மத்திய வீதியினூடாக செல்கின்ற மக்கள் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் அமைந்துள்ள உவர்மலை கீழ் வீதியினூடாக திரும்பி வரமுடியும்.
இவ்வீதி சுமார் 36 வருடங்களுக்குப் பின்னர் மக்களின் பாவனைக்காக திறந்து விடப்பட்டு மக்களின் பயணம் இலகுவாக்கப்பட்டுள்ளது.
இவ்வீதியானது 1988 ஆம் ஆண்டு மூடப்படும் வரை நகர பாடசாலை மாணவர்களுக்கான பேரூந்து சேவை ஒன்று இவ் வீதி ஊடாக நடைபெற்று வந்தது.
இப்பகுதிக்குச் சென்று திருகோணமலையின் மற்றுமொரு இயற்கை அழகை இரசிக்க முடியும்