திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலைக்கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி(78). இவரது மனைவி அலமாத்தாள்(75). இவர்களது மகன் செந்தில்குமார் (46) ஆகியோரை மர்ம கும்பல் கடந்த 28-ம் தேதி இரவு கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்த 8 பவுன் நகையை திருடிச் சென்றது.
இந்நிலையில், மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் உத்தரவின் பேரில், டிஐஜி சரவணசுந்தர் மேற்பார்வையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், வழக்கில் பெரியதாக எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து, தனிப்படைகளின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீஸார் வட்டாரத்தில் கூறும்போது, ‘‘குடும்பத்துக்குள் வேறு பிரச்சினைகளோ, முன்விரோதமோ இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 14 ஆண்டுகளில் இதுபோன்று கொடூரமாக நடந்த கொலை வழக்குகள் கணக்கெடுக்கப்பட்டு, விசாரிக்கப்படுகிறது. தற்போது 10 காவல் தனிப்படைகளை 14 தனிப்படைகளாக அதிகரித்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
காங்கயம், பல்லடம், அவிநாசிபாளையம், தாராபுரம், திருப்பூர் மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்’’ என்றனர்.
அமைச்சரிடம் சரமாரி கேள்வி: இந்நிலையில், செந்தில்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆறுதல் தெரிவித்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் பேசிய உறவினர்கள், “எந்த சம்பந்தமும் இல்லாமல் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை நடந்து 4 நாட்களுக்கு மேலாகிறது. இதுவரை கொலையாளிகளை பிடிக்கவில்லை. தோட்டத்து வீட்டில் வசிக்கும் விவசாயிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறோம். அவிநாசிபாளையத்தில் காவல் நிலையம் உள்ளது. ஆனால், சுற்றுவட்டாரத்தில் ஒரு இடத்தில் கூட சிசிடிவி கேமரா பொருத்தவில்லை’’ என சரமாரியாக கேள்வி எழுப்பிய அவர்கள், இந்த கொலை வழக்கில், குற்றவாளிகளை முழுமையாகப் பிடித்து அரசு தண்டிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “பல்லடம் கள்ளக்கிணறில் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். அதேபோல் இந்த கொலை வழக்கிலும் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.