யாழில் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தோருக்கு உணவு கொடுக்க மறுத்த கிராம சேவையாளர் – இருவர் கைது

6 0

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த சில குடும்பங்களுக்கு உணவு வழங்க மறுத்தார் என கிராம சேவையாளருடன் முரண்பட்ட குற்றத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி, கற்கோவளம் பகுதியை சேர்ந்த சில குடும்பங்கள் வெள்ளம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.

அவர்களில் சில குடும்பத்தினருக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (01)  கிராம சேவையாளர் உணவு வழங்க மறுத்தமையால் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து கிராம சேவையாளர், தனது கடமைக்கு இடையூறு விளைவித்தார்கள் என பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்திருந்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இருவரை கைது செய்திருந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தமக்கு கிராம சேவையாளர் உணவு வழங்க மறுத்தமையால் அதற்கு காரணம் கேட்க, தனது கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என பொய் முறைப்பாடு அளித்துள்ளனர் எனவும் அந்த பொய் முறைப்பாட்டுக்கமைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தமக்கு நீதி வேண்டும் எனவும் தெரிவித்து இன்றைய தினம் திங்கட்கிழமை (02) வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனையடுத்து, பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச செயலாளர், தாம் பக்க சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.