ஒதியமலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்

10 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 அன்று படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 40ஆவது ஆண்டு நினைவு தினம் படுகொலை இடம்பெற்ற ஒதியமலை கிராமத்தில் உள்ள நினைவுத்தூபி அருகில் இன்று திங்கட்கிழமை (02) அனுஷ்டிக்கப்பட்டது.

உணவுபூர்வமாக நடைபெற்ற இந்த நினைவேந்தலில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டும் தமது உறவுகளை நினைவுகூர்ந்தனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில் 1984 டிசம்பர் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் 27 பேர் சுடப்பட்டும் வெட்டப்பட்டும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

மேலும், 5 பேர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இவர்களின் நினைவாக ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்வு அக்கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஒட்டுசுட்டான் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை (30) நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு சென்று ஒலிபெருக்கிகளை அகற்றுமாறு மிரட்டியதாகவும், இன்று காலை நிகழ்வை  ஒலிபெருக்கிகளுடன் மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தியதாகவும் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், தேசிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் சிவரூபன் ஆகியோருடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.