முஸ்லிம் வழிபாட்டு தல விவகாரத்தில் இந்திய யூனியன் முஸ்​லிம் லீக் விரைவில் ஆர்ப்பாட்டம்

9 0

முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களை கைப்பற்ற சதி நடப்பதாகவும், அதை கண்டித்து நாடு முழுவதும் விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜக அரசு, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான விரோத செயல்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. முன்பு குடியுரிமை திருத்தச் சட்டத்தால் குழப்பத்தை ஏற்படுத்தினர். காஷ்மீருக்கு இருந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கி கொந்தளிப்பை ஏற்படுத்தினர். வக்பு திருத்தச் சட்ட மசோதா மூலம் நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக கிராம மக்களை தூண்டிவிட்டனர். காசி, மதுரா மஸ்ஜிதுகள் பற்றி அவதூறுகளை பரப்பினர். மஸ்ஜித் வளாகங்களில் நடத்தப்படும் மதரஸா கல்விக் கூடங்களை இழுத்து மூட உத்தரவிட்டனர்.இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் முஸ்லிம்கள் 5 வேளை தொழுகை நடத்தி வரும் சம்பல் ஷாஹி ஜூம்ஆ மஸ்ஜிது, முன்பு கோயிலாக இருந்தது. அதைத் தோண்டி ஆய்வு செய்ய வேண்டும் என சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தற்போது மஸ்ஜிது வளாகத்தில் தோண்டும் வேலையை தொடங்கிவிட்டனர். இதனால் கொத்திப்படைந்த அப்பகுதி முஸ்லிம்கள், பணிகளை தடுத்த நிறுத்த சென்றபோது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த கலவரம் குறித்து நேரில் ஆய்வு நடத்த சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் முஹம்மது பஷீரை, சம்பல் நகருக்குள் நுழைய விடாமல் தடுத்துள்ளனர். இது ஜனநாயக முரண்பாடாகும். இத்தகையை செயல்களை இனியும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. ‘பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது மாறி, பொறுத்தது போதும் பொங்கி எழு’ என்ற காலம் வந்துவிட்டது. முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்களை கைப்பற்ற நடக்கும் சதிகளை கண்டித்து விரைவில் எல்லா மாநிலத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.