தமிழகத்தின் மொத்த மின்நுகர்வு கடந்த 2023-24-ம் ஆண்டில் 742 கோடி யூனிட் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் வீடு, வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் மின்விநியோகம் செய்யும் பணியை தமிழக மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. மாநிலம் முழுவதும் தினமும் சராசரியாக 30 கோடி யூனிட்மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மின்நுகர்வு கடந்த ஏப்ரல் 30-ம் தேதி 45.43 கோடி யூனிட்டாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது.
இதற்கிடையே, கடந்த ஆண்டில் மொத்த மின்நுகர்வு அதிகரித்துள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும், பெட்ரோல், டீசலால் ஏற்படும் செலவை குறைக்கவும், தற்போது பலரும் மின்சார வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2023-24-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் 193 சார்ஜிங் மையங்களில் 35 லட்சம் யூனிட்மின்சாரம் பயன்படுத்தப்பட்டது. தவிர, கடந்த மார்ச்சில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது.
அடுத்ததாக, ஏப்ரல், மே மாதங்களில் கோடை வெயில் சுட்டெரித்ததால் வீடுகளில் ஏசி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்தது. மின்நுகர்வு 11,096 கோடி யூனிட் இதுபோன்ற காரணங்களால் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2023-24 நிதி ஆண்டில், தமிழகத்தின் மொத்த மின்நுகர்வு 11,096 கோடி யூனிட்டாக அதிகரித்துள்ளது. 2022-23 நிதி ஆண்டின் மொத்த மின்நுகர்வான 10,354 கோடி யூனிட்டை விட இது 742 கோடி யூனிட் அதிகம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.