மாத்தளையில் கொள்ளைச் சம்பவம் ; பொலிஸார் வெளியிட்ட தகவல் !

4 0

மாத்தளை – லக்கல பொலிஸ் பிரிவுப்புட்பட்ட பிரதேசத்தில் , வேனில் சென்ற சந்தேக நபர்கள் வீடொன்றினுள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

 

நவம்பர் மாதம் 10 திகதி ,  லக்கல பொலிஸ் பிரிவுப்புட்பட்ட பிரதேசத்தில்,  கொள்ளை கும்பலைச் சேர்ந்த சிலர் , வீடொன்றினுள் புகுந்து வீட்டின் உரிமையாளரை கட்டிவைத்து சித்திரவதை செய்துள்ளனர்.

பின்னர், வீட்டில் இருந்து ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான மாணிக்கக்கல் , இரண்டு கோடி ரூபா பணம் மற்றும் 15 இலட்சம் ரூபா  பெறுமதியான மாணிக்கக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் உட்பட ஆறு கோடிக்கும் அதிக பெறுமதியான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்த வீட்டில் உள்ள கார் ஒன்றை எடுத்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அந்த காரை கலேவெல பிரதேசத்தில் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை , ஒன்றரை கோடி ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான மாணிக்கக்கல் 7 துண்டுகளாக பிரிக்கப்பட்டு காலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் 15 இலட்சம் ரூபா பெறுமதி  மாணிக்கக்கல்லும் 25 இலட்சம் ரூபாய் பணம் , துப்பாக்கிகள், கத்தி  மற்றும் வேன் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும் மாத்தளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் லக்கல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே  09 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய சொத்துக்களை கைப்பற்றவும் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்யவும் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவித்தார்.