கடந்த சில நாட்களில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் பெருமளவான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியதால் மரக்கறிகளும் அழிவடைந்துள்ளன.
இந்நிலையில், நுவரெலியாவில் மத்திய சந்தையிலும் வீதியோர மரக்கறி விற்பனை நிலையங்களிலும் ஒரு கிலோகிராம் போஞ்சியின் மொத்த விற்பனை விலை 650 முதல் 750 ரூபா வரையிலும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாயின் விற்பனை விலை 1200 முதல் 1300 ரூபா வரையிலும் உயர்ந்துள்ளது.
ஏனைய மரக்கறி வகைகளின் விலை அதிகளவில் உயர்ந்த நிலையில் உள்ளதால் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நுவரெலியா மத்திய சந்தைக்கு வரும் அதிகமானவர்கள் மரக்கறிகளின் விலை அதிகரிப்பு காரணமாக நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து வருகின்றனர்.
அத்துடன், நுகர்வோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளதாகவும் இதனால் வியாபாரிகள் வியாபாரமின்றியும் அதிலும் பல மரக்கறிகள் இரண்டு, மூன்று நாட்களின் பின் பழுதடைந்து கழிவுகள் ஏற்படுவதாகவும் இதனால் பாரிய நட்டம் ஏற்படுவதாகவும் மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாடளாவிய ரீதியில் இவ்வாறு மரக்கறிகளின் விலைகள் அதிகரித்து வருவதுடன் சீரற்ற வானிலை காரணமாக தற்போது மரக்கறிகள் நுகர்வோரின் தேவைக்கேற்ற வகையில் விளைச்சல் இல்லாததால் காய்கறி விலை மேலும் உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக நுவரெலியா மாவட்டத்தில் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.