அம்பாறை உழவு இயந்திர விபத்து – பொலிஸார் தீவிர விசாரணை ; உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஸ்தலத்துக்கு விஜயம்!

10 0

அம்பாறை – மாவடிப்பள்ளி அனர்த்தம் இடம்பெற்ற பகுதிக்கு விஜயம் செய்து விபத்து குறித்த விசாரணைகளை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைய  கல்முனை பிராந்திய  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்  வழிகாட்டலில் குறித்த விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அப்பகுதியில் வெள்ள நிலை ஏற்பட்டபோது சுமார் 5 அடிக்கும் அதிகமான உயரத்தில் வெள்ளம் சென்றுள்ளதாகவும் மாணவர்களை ஏற்றி வந்த உழவு இயந்திரம் சுமார் 150 மீற்றர் இயந்திரத்துடன் இணைப்பை துண்டிக்கக்கூடிய வகையில் பெட்டி வேறாக பயணித்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் பல்வேறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கி 12 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானது.

இதன்போது நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற மாணவர்கள் இச்சம்பவத்தில்  பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை மொத்தமாக 08 சடலங்கள் மீட்புக் குழுவினரால்  மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மரண விசாரணைகளின் பின் குடும்பத்தினரிடம் சடலங்கள் ஒப்படைக்கப்பட்டன.