தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் 27.11.2024 புதன்கிழமை 91 மாவட்டத்தின் Villebon-sur-Yvette பகுதியில் உள்ள பிரமாண்டமான மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது. பகல் 12.30 மணிக்கு பொதுச்சுடரினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் திரு.ஜோசேப் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக் கொடியினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளர் திரு.ராசன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவரின் கடந்தகால மாவீரர்நாள் உரை இடம்பெற்றது. 13.35 மணிக்கு அகவணக்கம் இடம்பெற்றது.
துயிலும் இல்ல மணியோசை ஒலித்ததைத் தொடர்ந்து மாவீரர் லெப்.சங்கர் அவர்களின் திருவுருவப்படத்தின் முன்பாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு,மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
ஈகைச்சுடரினை 11.10.1990 யாழ்ப்பாணத்தில் வீரச்சாவடைந்த கப்டன் மணிமகன் அவர்களின் தாயார் ஏற்றிவைக்க 10.06.1996 அன்று வீரச்சாவடைந்த லெப்.கேணல் அன்பு (அம்மா) அவர்களின் சகோதரர் மலர்மாலை அணிவித்தார்.
சமநேரத்தில் பாரிசு துயிலும் இல்லத்தில் லெப்.கேணல் நாதன், கப்டன் கஜன், கேணல் பரிதி ஆகியோரின் கல்லறைகளில் வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், சார்சல் பகுதியில் அமைந்துள்ள லெப்.சங்கர் அவர்களின் நினைவுத்தூபியின் அருகில் மாவீரர் வணக்க நிகழ்வு இடம்பெற்றது. துயிலும் இல்லப்பாடல் ஒலிக்க ஆரம்பித்ததும், கண்ணீர் காணிக்கையோடு மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் சுடர் ஏற்றி மலர்வணக்கம் செய்தனர். தொடர்ந்து இரவுவரை மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுமக்கள் தமது மலர்வணக்கத்தை மேற்கொண்டவண்ணமிருந்தனர்.தாயகத்தில் மாவீரர் துயிலும் இல்லம் ஒன்றில் இருந்து
கொண்டுவரப்பட்ட மாவீரர் நினைவுக்கல்லும் மண்டபத்தில் வணக்கத்திற்கு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றன.
தமிழர் கலைபண்பாட்டுக் கழக கலைஞர்களின் மாவீரர் நினைவு சுமந்த பாடல்களும், தமிழ்ச்சோலைப் பள்ளி மற்றும் நடனப்பள்ளி மாணவர்களின் மாவீரர் நினைவுசுமந்த பாடல்களுக்கான நடன நிகழ்வுகளும், மாவீரர் நினைவு சுமந்த பேச்சுப் போட்டியில் முதல் இடங்களைப் பெற்றவர்களின் பேச்சுக்களும், பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்களின் பிரெஞ்சு மொழி உரை மற்றும் சிறப்பு விருந்தினர்களாக வருகைதந்திருந்த வெளிநாட்டு முக்கியஸ்தர்களின் பிரெஞ்சுமொழி உரைகள், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் உத்தியோகபூர்வ சட்ட ஆலோசகர்களின் உரைகள் என்பனவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தன.
பிரான்சின் ஏனைய பகுதிகள் மற்றும் தாயகத்தில் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்கள் திரையில் காண்பிக்கப்பட்டிருந்ததுடன் அனைத்தும் நேரலையாக இணைய வழியில் சென்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நாம் சஞ்சிகையும் சிறப்புவெளியீடாக மண்டபத்தில் வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டியில் (கவிதை கட்டுரை, பேச்சு, தனிநடிப்பு, பாட்டு, ஓவியம்) வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. பரிசில்களை மாவீரர் பெற்றோர் மற்றும் செயற்பாட்டாளர்கள் வழங்கி மதிப்பளிப்புச் செய்திருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தினரின் வெளியீடான “மாவீரர் ஓசைகள்” ஒலிவட்டும் அரங்கில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
வெளியீட்டுத் பிரிவுப் பொறுப்பாளர் திரு.ஜெகன் அவர்கள் ஒலிவட்டை வெளியிட்டுவைக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரான்சு நிர்வாகப் பொறுப்பாளர் திரு.நிதர்சன் அவர்கள் அதனைப் பெற்றுக்கொண்டார்.
தமிழர் கலை பண்பாட்டுக்கழக கலைஞர்களின் ” இனம் இருந்தா நிலம் இருக்கும்” என்ற சிறப்பு நாடகம் அனைவரையும் உணர வைத்தது. வழமைபோன்று வெளியீட்டுப்பிரிவினரும் தமது வெளியீடுகளை பிரமாண்டமாகக் காட்சிப்படுத்தியிருந்தனர். அவற்றை மக்கள் முண்டியடித்துக்கொண்டு வாங்கியதையும் காணமுடிந்தது.
தமிழீழ உணவகத்தினரும் கலந்துகொண்ட மக்களுக்கான உணவுத்தேவையை பூர்த்திசெய்திருந்தனர. ஊடகங்கள் குறித்த நிகழ்வுகளை காட்சிப்படுத்துவதில் முனைப்புக்காட்டியிருந்தன. தமிழீழ மக்கள் பேரவை, தமிழ் இளையோர் அமைப்பினர்,தமிழ்ப்பெண்கள் அமைப்பு, ஈழமுரசு போன்ற அமைப்புக்கள் தமது காட்சிப்படுத்தலை மேற்கொண்டிருந்தன.
இரவு 21.00 மணியளவில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து நிறைவடைந்ததும் தமிழீழத் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டது. தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் அனைத்து நிகழ்வுகளும் உணர்வோடு நிறைவடைந்தன.
அனுபவம்வாய்ந்த அறிவிப்பாளர்கள் மாவீரர் நினைவுசுமந்து சிறப்பாக நிகழ்வினைத் தொகுத்து வழங்கியிருந்தனர்.
வழமை போன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டுவந்து மாவீரர்களை நினைவேந்திச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
(தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு – ஊடகப்பிரிவு)