மாவீரர்நாள் 2024 -யேர்மனி, டோட்முண்ட்.

672 0

27.11.2024 அன்று யேர்மனியில் உள்ள டோட்முண்ட் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. தமிழீழ மண்மீட்புப் போரிலே வீரகாவியமான மாவீரர்களின் நினைவுகளைச் சுமந்து, ஏராளமான மக்கள் மிகவும் உணர்வெழுச்சியுடன் கலந்து கொண்டிருந்தார்கள்.
மாவீரர்நாள் நிகழ்வு மதியம் 12:55 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் தொடங்கிவைக்கப்பட்டது. பொதுச்சுடரை கடந்த சில வருடங்களாக எங்கள் மாவீரர்நாள் நிகழ்வுகளை பதிவுசெய்யும் சக ஒளிப்படக்கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிவரும் ஒளிப்படக்கலைஞர் ( தமிழ் மெமோறிஸ்) திரு. சுரேஸ் சங்கரப்பிள்ளை அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத்தொடர்ந்து தமிழீழத்தேசியக்கொடியை யேர்மனி தமிழ்க்கல்விக் கழகத்தின் துணைப்பொறுப்பாளர் திரு. யோகேந்திரன் சேரன் அவர்கள் ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து மதியம் 13:05 மணியளவில் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 2008 ஆம் ஆண்டிற்கான மாவீரர்நாள் உரையும், விடுதலைப்புலிகளின் அனைத்துலகத்தொடர்பகத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான மாவீரர்நாள் அறிக்கையும் திரையில் காண்பிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக மணியோலி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாவீரர்களுக்கான ஈகச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு, துயிலுமில்லப்பாடலும் ஒலிக்கவிடப்பட்டது. ஈகச்சுடரினை 23.11.1995 அன்று வலிகாமம் கோட்டத்தில் சூரியகதிர் படை நடவடிக்கைக்கு எதிரான சமரின்போது வீரச்சாவடைந்த வத்திராயன் தெற்கு தாளையடியைப் பிறப்பிடமாகக் கொண்ட, சின்னத்துரை பாலசிங்கம் எனும் இயற்பெயரையுடைய மாவீரர் கப்டன் அன்பழகன் அவர்களின் சகோதரர் திரு. சின்னத்துரை சண்முகலிங்கம் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத்தொடர்ந்து மக்கள் அனைவரும் மாவீரர்களுக்கு மலர்வணக்கம் சுடர்வணக்கம் செலுத்தினர்.
இதன்பின்னர் மாவீரர்நினைவு சுமந்த இசைவணக்கம், பேச்சு, கவிதை, நாடகம் சிறப்புரை, மதிப்பளிப்புகள், நடனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுடன், (சிறப்புரையினை தமிழர் ஒருங்கிணைப்புக்கு யேர்மனியின் பேர்லின் மாநிலப் பொறுப்பாளர் திரு குமணன் அவர்கள் ஆற்றினார்.) யேர்மனி தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் 10 நடன ஆசிரியர்கள் இணைந்து நெறியாள்கைப்படுத்திய நாட்டியத்தொகுப்பு இடம்பெற்றது. இந்நாட்டியத்தொகுப்பிற்கான கவிதைகள் கவிஞர் முல்லை ஜெயராசா அவர்களால் எழுதப்பட்டு, அவற்றுக்கான இசை தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தின் தமிழீழம் இசைக்குழுவின் பொறுப்பாளர் திரு எஸ். கண்ணன் அவர்களால் இசையமைக்கப்பட்டு, பாடகர்களான திரு எஸ். கண்ணன், திருமதி. அனுசியா, செல்வன். கௌதம் ஆகியோரால் பாடல் இசைக்கப்பட்டு அப்பாடல்களுக்கு இளம் நடனக்கலைஞர்களால் மிகச்சிறப்பாகவும் உணர்வெழுச்சியுடனும் நாட்டியநாடகம் ஆடப்பட்டது. நிகழ்வுகளின் நிறைவாக தமிழ் இளையோர் அமைப்பினரின் உறதியுரையும், அதனைத்தொடர்ந்து தமிழீழத்தேசியக்கொடி கையேந்தப்பட்டு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் எனும் எமது எழுச்சிப்பாடலுடன் அன்றைய மாவீரர்நாள் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.