பல்வேறு வாகன விபத்துக்களில் மூவர் பலி

9 0

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு வாகன விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (30) பேலியகொட, சீகிரியா மற்றும் குட்டிகல பொலிஸ் பிரிவுகளில் குறித்த விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

கொழும்பு – கண்டி வீதியில் களனி பாலத்திற்கு அருகில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பலத்த காயமடைந்து வீதியில் விழுந்துள்ளதாக பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் காயமடைந்தவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், குறித்த நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

களனியில் தற்காலிகமாக வசித்து வந்த அம்பாறை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, தம்புள்ளை – ஹபரணை வீதியின் இனாமலுவ பிரதேசத்தில் வீதியைக் கடந்த பாதசாரி ஒருவர் மீது லொறியொன்று மோதியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த நபர் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இனாமலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

பெல்மடுல்ல – நோனாகம வீதியின் ஹாகல பிரதேசத்தில் உழவு இயந்திரத்தின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 45 வயதுடைய பெரலனாதர பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.