குருணாகல் – புத்தளம் வீதியில் மாமுனுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வாரியபொல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (29) இரவு இடம்பெற்றுள்ளது.
லொறி ஒன்று வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றைக் கடந்து முன்னோக்கிச் செல்ல முயன்ற போது மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளின் செலுத்துனர் படுகாயமடைந்துள்ள நிலையில் வாரியபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் குருணாகல் பமுனாகொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஆவார்.
இதனையடுத்து லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.