முல்லைத்தீவு – சிலாவத்துறை பகுதியில் தீ விபத்தில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் முல்லைத்தீவு – சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் ஆவார்.
உயிரிழந்த முதியவர் தனது மகனின் வீட்டுக்கு அருகிலுள்ள மற்றுமொரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், கடும் மழையினால் ஏற்பட்ட குளிரை எதிர்கொள்ளும் வகையில் வெப்பமூட்டுவதற்காக வீட்டுக்குள் தீ பற்ற வைத்துள்ளார்.
இதன்போது தீ பரவியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
முதியவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.