உழவு இயந்திரத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட சிலர் வௌ்ளத்தில் சிக்கி காணாமல் போகியிருந்த நிலையில் மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கையின்போது 5 மாணவர்கள் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர்.
மீட்புப் படையினரின் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து ஐந்தாவது நாளாக இடம்பெற்று வந்தது.
அதன்போது இதுவரை மொத்தமாக 08 பேரின் சடலங்கள் மீட்புப்பணியாளர்களினால் மீட்கப்பட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி மாணவர்களின் 06 சடலங்களும் , சாரதியின் சடலமும், மற்றுமொரு இளைஞரின் சடலமாக மொத்தம் 08 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
மீட்பு பணியாளர்களால் வெள்ளத்தில் காணாமல் போனவர்களை தொடர்ந்து தேடும் நடவடிக்கை இடம் பெற்று வந்த நிலையில் இன்று சனிக்கிழமை (30) காலை இறுதியாக ஒரு சடலங்கள் மீட்கப்பட்டது.
மத்ரஸா முடிந்து மாணவர்களும் உழவு இயந்திர சாரதி மற்றும் உதவியாளரும் பயணித்துக்கொண்டிருந்த தருணத்தில் உழவு இயந்திரம் வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இந்த விபத்து இடம்பெற்றது.
மீட்பு பணியின் போது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டும், உழவு இயந்திரமும் மீட்கப்பட்டதுடன், இதில் பயணித்தவர்கள் எத்தனை பேர், எத்தனை பேர் காணாமல் போனார்கள் என்பதை துல்லியமாக கூற முடியாத நிலையில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டன.
திடீர் மரண விசாரணை அதிகாரி மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குடும்பத்தினரிடம் ஓப்படைக்கப்பட்டு வருகின்றன.