மாவீரர்கள் ஒரு சத்திய இலட்சியத்திற்காக மரணிக்கிறார்கள். அவர்களது சாவு சாதாரண மரண நிகழ்வு அல்ல, எமது தேச விடுதலையின் ஆன்மீக அறை கூவலாகவே மாவீரர்களது மரணம் திகழ்கின்றது.
என்ற தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையை மனதில்
நிறுத்தி மாவீரர் நாள் நிகழ்வு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தமிழீழத் தேசியத்தலைவரின் 2008ஆம் ஆண்டு மாவீரர் நாள் உரை ஒளிபரப்பப்பட்டதை தொடர்ந்து, அனைத்துலகத் தொடர்பகத்தின் 2024 மாவீரர் நாளுக்கான உத்தியோகபூர்வ கொள்கை பகுப்பு அறிக்கை ஒலியலை மூலம் ஒலிபரப்பப்பட்டது.
சரியாகத் தாயக நேரம் மாலை 6.05 மணிக்கு மணிஒலி எழுப்பப்பட்டு அகவணக்கம் செலுத்தி முதன்மைச்சுடர் ஏற்றியவுடன், தமிழீழக் கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தங்கள் இன் உயிர்களை ஆகுதியாக்கிய எம் தேசப் புதல்வர்களின் கல்லறைக்கு மாவீரர் குடும்ப உறவுகள் சுடரேற்றியவுடன் மாவீரர் துயிலுமில்லப்பாடல் ஒலிபரப்பப்பட்டது.
தொடந்து முதல் மாவீரன் லெப்.சங்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து தேசநிலா இசைக்கலைஞர்கள் மாவீரர் கானம் இசைக்க மாவீரர் குடும்பத்தினர், மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினர் மற்றும் பொதுமக்களாலும் மலர் வணக்கம் செலுத்தி, ஈகைச்சுடரேற்றப்பட்டது.
மாவீரர் நாள் நிகழ்வில் டென்மார்க் நாடாளுமண்ற மற்றும் நகரசபை உறுப்பினர்களின் பேச்சுக்கள், டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியம் மற்றும் டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூட உறுப்பினர்களின் சிறப்புரைகளுடன், மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கவிதைகள், பேச்சுகள், பாடல்கள், கவிதா நிகழ்வு மற்றும் எழுச்சி நடனங்கள் என்பனவும் இடம்பெற்றன.
தொடர்ந்து டென்மார்க் நடனக்கல்லூரி ஆசிரியர்களின், மாணவர்கள் வழங்கிய நடனங்களுடன், டென்மார்க் கலைபண்பாட்டுக் கழகம் தயாரித்து வழங்கிய “தீருவில் தீ” நாடகமும் இடம் பெற்றது.
தொடர்ந்து அறிவாடல் ஒருங்கிணைப்புக் குழுவால் இணையவழியில் நடாத்தப்பட்ட அனைத்துலக மாணவர்களுக்கான அறிவாடல் போட்டி 2024இல், டென்மார்க்கில் இருந்து கலந்து கொண்டு, வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தினால் இம் மாதம் 3 ஆம் திகதி நடைபெற்ற மாவீரர் நினைவு சுமந்து ஓவியப்போட்டி 2024 இல் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி மதிப்பளிக்கபட்டனர்.
அனைத்து நிகழ்வுகளும் மாவீரர்களின் தியாகத்தையும், அவர்களின் வீரச் செயல்களையும் உணர்த்தியதுடன் மக்களுக்கு எழுச்சியையும் ஊட்டியதாக அமைந்தன.
தேசியத்தலைவரின் சொல்லுக்கு செயல் வடிவம் கொடுத்து, இளையோர்கள் முன்னின்று மாவீரர் நாள் நிகழ்வுகளை மிகவும் உணர்புபூர்வமாக நடத்தியிருந்தார்கள்.
மாவீரர்களின் தியாகம் வார்த்தைகளால் சொல்லமுடியாதவை, அவர்களின் தியாகத்தை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லவேண்டிய கடமை இளையோரின் கைகளி் ள்ளது. அத்துடன் தமிழீழம் என்ற இலக்கை அடையும் வரை அயராது செயற்பட வேண்டுமென, இன்றைய நாளின் செயல்பாடுகளின் ஊடாக இளையோருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலைத் தொடர்ந்து தேசியக்கொடி கையேந்தப்பட்டு,
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற எமது தாரகமந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.