27.11.2024 அன்று ஸ்ராஸ்பூர்க் நகரில் மாவீரர்நாள் நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றிருந்தது. மாவீரர் நினைவுகளைச் சுமந்து, மண்டபம் நிறைந்த உறவுகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்கள்.
மாவீரர்நாள் நிகழ்வு சரியாக 1மணி 15 நிமிடத்திற்கு ஆரம்பமாகியிருந்தது. மாவீரர்நாள் சிறப்புரையைத் தொடர்ந்து சரியாக 13.35க்கு மணி ஒலித்து ஓய,அகவணக்கத்தைத் தொடர்ந்து பிரதான ஈகைச்சடரினை வீரவேங்கை 2ம் லெப் மகாலிங்கம் -சந்திரன் அவர்களின் சகோதரி நாகசீலி அவர்கள் ஏற்றிவைக்க அதனைத் தொடர்ந்து ஏனைய உரித்துடைய உறவுகளும் கல்லறைகளில் விளக்குகளை ஏற்றினர். அதே நேரம் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மாவீரர் திரு உருவப்படக் குடிலுக்கு பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில்; வருகை தந்திருந்த திரு. சுப்பிரமணியம் மகான் அவர்கள் விளக்குகளை ஏற்றினர். துயிலுமில்லப் பாடலைத் தொடர்ந்து உறுதி மொழி எடுக்கப்பட்டதுடன் மலர்வணக்கமும் நடைபெற்றது.
மாவீரர் துயிலும் இல்லத்தில் வீரமறவர்களின் நடுகற்கள் நாட்டப்பட்டு பல வண்ண மலர்களால் சூடப்படடிருந்த காட்சி கண்கொளாக் காட்சியாக இருந்தது.
இதனை தொடர்ந்து மாவீரர் நாள் சிறப்புரையை திரு. சுப்பிரமணியம் மகான் அவர்கள்ஆற்றினார்.
மிகவும் உணர்வுடன் நடைபெற்ற மாவீரர் நிகழ்வில் மாவீர் பெற்றோர், உறவினர் மதிப்பளிக்கப்பட்டனர். மதிப்பளிப்பு நிகழ்வை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திரு. சுப்பிரமணியம் மகான் அவர்களும், மனிதநேய செயற்பாட்டாளரான திரு. நடராசா கிருபானந்தன் அவர்கள் முன்னின்று நடாத்தி வைத்தார்.
தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனையைத் தொடர்ந்து கலைநிகழ்வுகள் ஆரம்பமாகின. மாவீரர் நினைவு சுமந்த பாடல்கள், கவிதைகள், பேச்சுகள் இடம் பெற்றன.
மாவீரர் நினைவாக நடைபெற்ற கலைத்திறன் போட்டிகளில் தேசிய மட்டத்தில் 3 மாணவர்கள் வெற்றி பெற்றிருந்தனர். (பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி, மற்றும் கட்டுரைப்போட்டி) போட்டிகளில் பங்கு கொண்ட தமிழ்ச் சோலை மாணவர்களுக்கு மாவீரர்நினைவுப் பரிசில்களும்,கேடயங்களும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இறுதியில் நம்புங்கள் தமிழீழம் பாடலுடனும், “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” தாரக மந்திரத்துடன் மாவீரர்நாள் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.