வரலாற்றின் பாதையில் தமிழினத்தை தலைநிமிரச்செய்து தமிழ்த்;தேசியத்தின் பிறப்பாய் உதித்த பெருநெருப்பாம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை எழுபது தாயகத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் தேசமெங்கிலும் எழுச்சியாக கொண்டாடப்படுகின்றது. அந்தவகையில் சுவிசின் பல பாகங்களில் தமிழின உணர்வாளர்கள் கேக் வெட்டியும், மற்றவர்களுடன் வாழ்த்துகளையும், இனிப்புக்களையும் பகிர்ந்து தமது மகிழ்ச்சியைக் கொண்டாடினர்.
அதன் ஒரு பகுதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையினால் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நடாத்தப்படும் பாசல் மாநிலத்தில் Messe மண்டபத்தில் தேசிய மாவீரர் நாள் முன்னேற்பாடுகளுக்கு மத்தியில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை எழுபது எழுச்சியாகவும், எளிமையாகவும் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் மேதகு எழுபது சார்ந்த சிறப்பு வெளியீடுகளும் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் பேச்சுக்கள், எழுச்சிப் பாடல், எழுச்சி நடனம், போன்றவற்றுடன் தமிழீழத் தேசியத்தலைவர் சார்ந்த விபரணத்தொகுப்பும் அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டது. மேலும் தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிசினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவுப் பேச்சுப்போட்டியில் தொடர்ச்சியாக பத்து வருடங்கள் பங்குபற்றியவர்களுக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றது.
நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலை அவைரும் இணைந்து பாடியதனைத் தொடர்ந்து தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.
தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளை.