குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தனது பணி இடைநிறுத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தப் போவதில்லை என சட்டமா அதிபர் இன்று (29) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இந்த மனு இன்று எஸ். துரைராஜா, ஏ. எச். எம். டி. நவாஸ் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
இதன்போது, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோர் சார்பில் சட்டமா அதிபர் இனி ஆஜராகமாட்டார் என பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விவேகா சிறிவர்தன நீதிமன்றில் முன்னிலையாகி குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பிரதிவாதிகளுக்கு தனிப்பட்ட சட்டத்தரணிகளை ஆஜர்படுத்தும் திறன் உள்ளதாக அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்பின், மனு மீதான பரிசீலனை 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 03 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த தன்னை காலி பிரதி பொலிஸ் மா அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக இடமாற்றம் செய்து, பின்னர் பணி நீக்கம் செய்ததன் ஊடாக தனது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பு ஒன்றை வழங்குமாறு கோரி ஷானி அபேசேகர இந்த மனுவை சமர்ப்பித்திருந்தார்.