அன்றாடம் உழைத்து உண்பவர்கள் பெரும் அவலத்தில்! – யாழ். வெள்ள நிலை குறித்து ரஜீவன் எம்.பி.

15 0
வீதிகள், கட்டடங்களை அமைக்கும்போது உரிய விதிமுறைகளை பின்பற்றாமையும் குளங்களை தூர்வாருவது குறித்து கவனம் செலுத்தாததுமே யாழ்ப்பாணத்தில் வெள்ளம் வழிந்தோடாமல் தேங்கி நிற்பதற்கு காரணம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தின் வெள்ள நிலைமைகள் குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நேற்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் இயற்கை அனர்த்தம் தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் சந்திரசேகரும் கலந்துகொண்டார்.

வெள்ளத்தினால் இடம்பெயர்ந்த மக்களை பார்வையிட்டோம். அவர்கள் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்ளவில்லை.

பல பகுதிகளில் வெள்ளம் வழிந்தோடாமல் நிற்கிறது. யாழ்ப்பாணத்தில் வெள்ளம் வழிந்தோட வழியின்றி தேங்கி நிற்பதற்கு காரணம், வீதிகளை உயரமாக அமைத்தமையே ஆகும்.

வீதிகளை புனரமைத்து மீண்டும் கட்டிய வேளை அவற்றை உயரமாக கட்டியுள்ளனர். இதேபோல வீடுகளை, வர்த்தக நிலையங்களை அமைக்கும்போது விதிமுறைகளை பின்பற்றவில்லை. குளங்களை தூர்வாரவில்லை. வடிகால் அமைப்பு சிறந்த முறையில் இல்லை. பருத்தித்துறை வீதி இதற்கு ஒரு உதாரணம். அங்கு வடிகாலமைப்பு இல்லாத நிலை காணப்படுகிறது.

இவற்றுக்கு தீர்வு காண்பதற்கு நீண்டகாலம் எடுக்கும்.

வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு இடமில்லாத நிலை காணப்படுகிறது. இதனால் தற்போதைய நிலை இன்னும் ஓரிரு தினங்கள் நீடிக்கலாம். சில பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு நீடிக்கலாம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்து அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்படுகிறது. தேசிய மக்கள் சக்தியும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளது.

பல்கலைக்கழக சமூகம், வர்த்தக சமூகம், லயன்ஸ் கழகம் உட்பட பல தரப்பினருடன் இணைந்து உதவிகளை வழங்கி வருகின்றோம். எனினும் இந்த உதவிகள் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக ஏனைய அனைவரும் மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு உதவ முன்வரவேண்டும்.

தற்போதைய சூழலில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓரளவுக்கு உதவிகளை வழங்கிவருகின்றோம். சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றோம்.

கூலி வேலைகளுக்கு செல்பவர்கள், அன்றாடம் உழைத்து உண்பவர்களின் நிலைமையே மிகவும் கஷ்டமானதாக காணப்படுகிறது. அவர்கள் உலர் உணவை கோருகின்றனர்.

சமூக நிறுவனங்கள் இவற்றை வழங்க முன்வரவேண்டும். இவற்றை கிராம சேவகர்கள், கச்சேரி ஊடாக வழங்க முன்வரவேண்டும்.

குடிநீர் பிரச்சினை, குழந்தைகளுக்கான உணவுப் பிரச்சினை போன்றவையும் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.

சில இடங்களில் அதிகாரிகளின் அசமந்தப்போக்கை அவதானிக்க முடிகிறது. அதிகாரிகள் மக்களுக்கு முழு மனதோடு உதவ முன்வரவேண்டும் என்றார்.