சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட ரில்ஹேன பகுதி மக்களை சந்தித்தார் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர்

13 0

கஹவத்தை பெல்மடுல்லை ரில்ஹேன தோட்ட பிரதேசத்தில் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்ட மக்களை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேரடியாக சந்தித்து பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.

அத்தோட்ட மக்கள் தொடர்ந்து அவா குடியிருப்புகளில் மிகவும் ஆபத்தான நிலையில் வாழ்ந்து வருகின்றனர். கடந்த அரசாங்கத்தின் அசமந்தப் போக்கே இதற்கு காரணம் என  பிரதி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கடந்த 2017ஆம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன அப்பிரதேசத்தில் மக்கள் வாழ்வதற்கு பொருத்தமற்ற இடமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தும் கூட, இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட ரில்ஹேன தோட்ட மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது சம்பந்தமாக உயர்மட்ட குழுக்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அப்பகுதி மக்களிடம் தெரிவித்திருந்தார்.