கிழக்கு மாகாண ஆளுநருக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையேயான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (29) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர, மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன், இலங்கை தமிழ் அரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞா. ஸ்ரீநேசன், இ. ஸ்ரீநாத் ஆகியோருடன் அனர்த்த முகாமைத்துவ உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டனர்.
கடந்த மூன்று நாட்களாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் பற்றி இந்த கூட்டத்தில் பேசப்பட்டது. மக்கள் தமது சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பினாலும் கூட பல விடயங்களை கருத்திற்கொள்ளவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
அநேகமான பாலங்கள், பாதைகள் போன்றன சேதமடைந்துள்ளன. இதனை புனரமைப்பு செய்வதற்குரிய ஆயத்தங்கள் மிக விரைவில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க, எதிர்வரும் திங்கட்கிழமை (02) காலை 10.00 மணிக்கு மாவட்ட மட்டத்தில் அனைத்து திணைக்கள அதிகாரிகளையும் இணைத்து கூட்டமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனூடாக பிரதேசங்களில் மேற்கொள்ளவேண்டிய செயற்பாடுகள், போக்குவரத்து ஒழுங்குகளுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அனர்த்த முகாமைத்துவக் குழுவினரால் குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்பட்டபோதும் அத்தொகையினை முறையான விதத்தில் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் முன்மொழிவுகள் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அத்துடன் வெள்ள நேரங்களில் படுவான்கரையையும் எழுவான் கரையையும் இணைக்கும் செயற்றிட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர்களே முன்னெடுக்க வேண்டியிருந்ததாகவும் இது தொடர்பான மேலும் சில விடயங்களும் இந்த கூட்டத்தில் பேசப்பட்டன.