வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை அலுவலர்களுக்கு நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள் மூலம் வழங்கப்படும் பயிற்சியை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
வன்கொடுமை தடுப்பு சட்டம், விதிகள் தொடர்பாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறையின் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் துறை சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது. ‘சமத்துவம் காண்போம்’ என்ற பெயரிலான இந்த பயிற்சியை சென்னை எழும்பூரில் அமைச்சர் மதிவேந்தன் நேற்று தொடங்கி வைத்து, பயிற்சி கையேட்டை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடியுரிமைகள் பாதுகாப்பு சட்டம், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் அனைத்து சமுதாய மக்களும் சமூக சமத்துவம், நல்லிணக்கத்துடன் வாழ்வதை உறுதி செய்யும் நோக்கில் கடந்த 1998 முதல் ஆண்டுதோறும் ஜனவரி 24 முதல் 30-ம் தேதி வரை ‘மனிதநேய வார விழா’ கொண்டாடப்படுகிறது.
இதுதவிர, பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. உயிரிழப்புக்கு பின்னரும் நிலவும் சாதி வேற்றுமையை களைய, சமத்துவ மயானம் பயன்பாட்டில் உள்ள கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கும் திட்டம் கடந்த 2021 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணி, ஓய்வூதியம், வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தின்கீழ் இந்த ஆட்சியில் முந்தைய நிலுவை இனங்கள் உள்ளிட்ட 360 பேருக்கு வேலைவாய்ப்பு, 615 பேருக்கு மாதாந்திர ஓய்வூதியம், 138 பேருக்கு வீட்டுமனை பட்டா, 68 பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டம், விதிகளை அனைத்து நிலை அலுவலர்களும் அறிந்து கொள்ளும் வகையில் விரிவான பயிற்சி அளிக்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வன்கொடுமை வழக்குகளை கையாள்வதில் அனுபவம் பெற்ற நீதிபதிகள், சட்ட வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள் மூலம் இப்பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார். முன்னாள் நீதிபதிகள் கே.சந்துரு, டி.அரி பரந்தாமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.