வடக்கில் புயலின் வீரியம் தீவிரம்! அபாயம் நீங்கவில்லை

20 0

தற்போது நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக நாளையும் (29) நாளை மறுதினமும் (30) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் மிதமான அல்லது கன மழை பெய்யக்கூடும் என யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பதிவில் மேலும்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்திய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது பருத்தித்துறையின் கற்கோவளத்திலிருந்து கிழக்காக 430 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது.

இதன் நகர்வு வேகம் மிக மிக குறைவாகவே உள்ளது. இன்று மாலை 6.00 மணியிலிருந்து மணித்தியாலத்திற்கு 1.2 கி.மீ. வேகத்திலேயே நகர்கின்றது. இதே வேகத்தில் நகர்ந்தால் இது கரையைக் கடக்கும் திகதி மாற்றமடையும்.

இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து எதிர்வரும் 30.11.2014 அன்று இந்தியாவின் புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளது.

இதில் வேடிக்கையான விடயம் யாதெனில், தற்போது பருத்தித்துறைக்கு கிழக்காக 430 கி.மீ. தொலைவில் உள்ள இதன் மையம், கரையைக் கடக்கும் போது பருத்தித்துறைக்கு வடகிழக்காக 113 கி.மீ. தொலைவில் காணப்படும்.

ஆகவே, இதன் மூலமே இதன் நகர்வு பாதை எத்தன்மை வாய்ந்ததென அறிய முடியும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வு வேகமும் திசையும் நிச்சயமாக ஆய்வுக்குட்படுத்த வேண்டிய விடயம்.

ஒரு தாழமுக்கம்/ புயல்/ சூறாவளி தோற்றம் பெற,

(1) சமுத்திர மேற்பரப்பின் சூடான வெப்பநிலை ( Sufficient warm temperature at sea surface )

(2) வளிமண்டல உறுதியற்ற தன்மை (Atmospheric instability)

(3) கொரியோலிசு விசையின் செல்வாக்கு பகுதி (lmpact area of Coriolis force)

(4) வளிமண்டல மாறன் மண்டலத்தின் கீழ் மற்றும் மத்திய பகுதிகளில் காணப்படும் உயர் ஈரப்பதன் (High humidity in the lower to middle levels of the troposphere)

(5) முன்னரே காணப்படும் குறைவளவான குழப்பம்(A pre-existing low-level focus or disturbance)

(6) குத்தான காற்று முறிவு(Vertical wind shear) என்பன அமைதல் வேண்டும்.

ஆனால் ஒரு தாழமுக்கம்/ புயல்/ சூறாவளி நகர்வதற்கு சில விசைகள் அடிப்படையானவை.

1. அமுக்க சாய்வு விகித விசை ( Pressure Gradient Force)

2. மைய நீக்க விசை(centrifugal force)

3. கொரியோலிசு விசை(Coriolis force)

4. உராய்வு விசை (Frictional Force)

அந்த வகையில் தற்போது உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வினை மைய நீக்க விசை மற்றும் உராய்வு விசை மற்றும் கொரியோலிசு விசை ஆகியன பாதித்துள்ளன.

கொந்தளிப்பான கடல்

அதனால் தான் மிக மெதுவாகவும் குழப்பமான திசை மாற்றங்களுடனும் இது நகர்கின்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக நாளையும் நாளை மறுதினமும் (29 மற்றும் 30ம் திகதிகள்) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

வடக்கில் புயலின் வீரியம் தீவிரம்! அபாயம் நீங்கவில்லை | Tomorrow Weather In North And East Sri Lanka

 

குறிப்பாக திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இன்று இரவும் ஏனைய பகுதிகளுக்கு நாளையும் மழை கிடைக்கும். மிகக் கன மழை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 45-55 கி.மீ. வரை வீசும்.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கும் வரை கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடற்றொழிலாளர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவும் – என்றுள்ளது.