பணம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்தவும்

15 0

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக பணம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை. அதுதொடர்பில் முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார  கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஈ 8 விசா குழுவின் கீழ் பருவகால தொழில் வாய்ப்புக்களை நாட்டுக்கு பெற்றுக்கொள்வதற்காக விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்றவகையில் இலங்கை மற்றும்  கொரிய குடியரசில் செயற்படுத்தப்படும் சட்ட நிலைமைகளை  சம்பந்தப்படுத்திக்கொண்டு சட்ட ரீதியாகவும் வெளிப்படைத்தன்மையுடனுமே நடவடிக்கை எடுத்தேன்.

200 மில்லியன் டொலராக இருந்த நாட்டின் மாதாந்த வெளிநாட்டு செலாவணியை 500 மில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கு முன்னெடுத்த நடவடிக்கையின்போது இருதரப்பு ஒப்பந்தத்தின் ஊடாக கொரிய தொழிலுக்காக தொழிலாளர்களை அனுப்புவதை அதிகரித்துக்கொள்வதற்கு கொரியாவில் பருவகால தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தேன்.

அதேநேரம் இதுவரை எமது நாட்டுக்கு திறக்கப்படாமல் இருந்த பல தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள எங்களுக்கு முடியுமாகி இருந்தது.இரு தரப்பு உடன்படிக்கைக்கு அமைய கொரியாவில் கப்பல் நிர்மாணத்துறையில் எமக்கு தொழில் வாய்ப்பு கிடைத்தது. அதேபோன்று தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்ற கொரியாவில் விவசாய துறையில் பருவகால தொழில் வாய்ப்புகளை (ஈ8 குழுவின் கீழ் விசாவுடன் தொழில்) திறந்துகொள்வதற்கு அதன் பிரகாரமே நடவடிக்கை எடுத்திருந்தோம்.

என்றாலும் கடந்த ஒன்றை வருடமாக வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்காக நான் பணம் பெற்றுக்கொண்டே  அனுப்பியதாக எனக்கு எதிராக தொடர்ந்து சமூகவலைத்தலங்கள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வழியாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த குற்றச்சாட்டு எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அரசியல் வாழ்க்கைக்கும் பாதிப்பாகும். இந்த குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கிறேன்.

எனவே வெளிநாட்டுக்கு தொழிலுக்கு அனுப்பும் நடவடிக்கையில் பணம் பெற்றுக்கொண்டு அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி இருந்தால் அது பாரிய குற்றமாகும். அவர்கள் தொடர்பில் தராதரம் பார்க்காமல்  சட்டத்தை நிலைநாட்ட வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கை மற்றும் முறையான விசாரணையை விரைவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.