இலங்கை பொருளாதார முன்னேற்றத்தைக் காண்பிக்கிறது

21 0

மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதானது, மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதிலும், நிதியியல் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதிலும் இலங்கை அடைந்திருக்கும் முன்னேற்றத்தைக் காண்பிப்பதாக இலங்கை வர்த்தக சம்மேளனம் (சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ்) தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தினால் அனுசரணை அளிக்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் தொடர்பில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மூன்றாம் கட்ட மீளாய்வை அடுத்து நாணய நிதிய அதிகாரிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டது.

இதுகுறித்து வரவேற்பு வெளியிட்டிருக்கும் இலங்கை வர்த்தக சம்மேளனம் (சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ்), இந்த உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடானது கட்டமைப்பு மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதிலும், பொருளாதார மீட்சிக்கு மத்தியில் நிதியியல் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதிலும் இலங்கை அடைந்திருக்கும் முன்னேற்றத்தைக் காண்பிப்பதாகத் தெரிவித்துள்ளது.

அதேவேளை தற்போது முன்னேற்றங்கள் அடையப்பட்டிருப்பினும், மறுசீரமைப்பு செயன்முறையைத் தொடர்ந்து முன்னெடுப்பதும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிப்புச்செய்யக்கூடிய புதிய வாய்ப்புக்களை நோக்கி நகர்வதும் அவசியம் எனவும் இலங்கை வர்த்தக சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

அதுமாத்திரமன்றி இந்த உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டை அடுத்து, நாணய நிதியத்தினால் நான்காம் கட்ட நிதி விடுவிக்கப்படுவதற்கு அவசியமான தேவைப்பாடுகளை அரசாங்கம் பூர்த்திசெய்யும் என எதிர்பார்ப்பதாகவும் அச்சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.