தேசிய ஐக்கியம், நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

14 0

இன ரீதியில் பிளவுபட்டு பிரிந்து செயற்படாமல், இலங்கையர்கள் என்ற நோக்காக்கொண்டு இணைந்து செயற்படுவதன் மூலம் நாடு என்றவகையில் எமக்கு முன்னோக்கிச்செல்ல முடியும் என தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் மொஹமட் முனீர் முழப்பர் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்ட மொஹமட் முனீர் முழப்பர் வியாழக்கிழமை (28) இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சு காரியாலயத்தில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இனங்களுக்கிடையில் ஐக்கியம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாரிய பணியை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சு பதவியை வழங்கியமை தொடர்பில் ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆளும் அரசாங்கத்துக்கு கிடைக்கப்பெற்ற மக்கள் ஆணை ஊடாகவே அனைவரும் இலங்கையர்கள் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. இன ரீதியில் பிளவுபட்டு பிரிந்து செயற்படாமல், இலங்கையர்கள் என்ற நோக்காக்கொண்டு இணைந்து செயற்படுவதன் மூலம் நாடு என்றவகையில் எமக்கு முன்னோக்கிச்செல்ல முடியும்.

தேசிய ஐக்கியம் மற்றும் மத நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் செயற்படுவதை ஒரு பொறுப்பாக கருத வேண்டும். இலங்கையர்கள் என்ற உணர்வு கடந்த காலங்களில் மக்களிடமிருந்து தூரமாகியே இருந்தது. கடந்த காலங்களில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் உண்மையை தேடும் பொறுப்பு எங்களிடம் இருக்கிறது.

உண்மையை தேடுவதன் ஊடாக நீதியை நிலைநாட்ட வேண்டும். தேசிய ஐக்கியம் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

எனவே இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஊடகங்களுக்கு பாரிய பொறுப்பு இருக்கிறது.வளமான நாடு அழகான வாழ்க்கையை கட்டியெழுப்ப தேசிய ஒருமைப்பாடு மிகவும் முக்கியமாகும் என்றார்.

இந்நிகழ்வில் சர்வமத தலைவர்கள், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, அமைச்சின் மேலதிக செயலாளர் ராேஹன ஹபுகஸ்கந்த, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் மேலதிக செயலாளர் (தேசிய ஒருமைப்பாடு) யூ.குஹநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.