இழுவைகள், மீட்பு கப்பல் டெண்டர் முறைகேடு: சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 இடங்களில் சிபிஐ சோதனை

15 0

சென்னை துறைமுகத்தில் கழிவு செய்யப்பட்ட இழுவைகள், எண்ணெய் மீட்பு கப்பல் டெண்டர் முறைகேடு வழக்கில் சென்னை உள்ளிட்ட 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.27 லட்சம் பணம், முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. சென்னை துறைமுகத்தில் கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டில் கழிவு செய்யப்பட்ட 4 இழுவைகள் மற்றும் ‘அன்னம்’ என்ற எண்ணெய் மீட்பு கப்பல் ஆகியவற்றுக்கு டெண்டர் கோரப்பட்டிருந்தது.

இந்த டெண்டரைகுறிப்பிட்ட சிலருக்கு வழங்குவதற்காக, அப்போதைய துறைமுக போக்குவரத்து முதுநிலை துணை இயக்குநராக இருந்த புகழேந்தி, ஒப்பந்ததாரர்களிடம் ரூ.70 லட்சம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, துறைமுக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி முரளி கிருஷ்ணன் கொடுத்தபுகாரின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருந்ததை அறிந்த சிபிஐ அதிகாரிகள், கடந்த அக்டோபர் 25-ம் தேதி துறைமுக முதுநிலை துணை இயக்குநர் புகழேந்தி மற்றும் அவருக்கு லஞ்சம் வழங்கி டெண்டர் பெற்ற ஒப்பந்ததாரர்கள் அயப்பாக்கம் ராகுல் சக்கரவர்த்தி, மதுரவாயல் லுட்வின் ராஜீவ், ராயப்பேட்டை மதன்குமார், நெல்லை மைதீன் ராஜா, தஞ்சாவூர் ராஜலிங்கம் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், துறைமுக முதுநிலை துணை இயக்குநர் புகழேந்தி வீடு, ஒப்பந்ததாரர்கள் வீடு, அலுவலகம் உட்பட சென்னை, திருவள்ளூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி ஆகிய 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 26-ம் தேதி சோதனையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் வராத ரூ.27 லட்சம் பணம், முறைகேடாக டெண்டர் பெற்றதற்கான முக்கிய ஆவணங்களை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.