நாணய நிதிய உடன்படிக்கையில் நிபந்தனைகளுக்கு உட்பட்ட மாறுதல்கள்

10 0

சர்வதேச நாணய நிதியத்தினால் அனுசரணையளிக்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்ட விதத்தில் அச்செயற்திட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொள்ளமுடியும் எனவும், அத்தகைய சில மாறுதல்களுடனேயே கடந்த வாரம் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையின் இவ்வாண்டுக்கான இறுதி மீளாய்வுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கொள்கைத்தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கில் இன்று புதன்கிழமை (27) கொழும்பிலுள்ள மத்திய வங்கியின் கேட்போர்கூடத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச்சந்திப்பில் நாணயச்சபைக்கூட்டத்தின் தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாணய நிதிய ஒப்பந்தத்தில் மாற்றங்களா?

அதன்படி கடந்த ஜனாதிபதித்தேர்தல் பிரசாரங்களின்போது சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என தற்போதைய ஆளுந்தரப்பு கூறியிருந்த நிலையில், அத்தகைய மாற்றங்கள் எவையேனும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றனவா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த ஆளுநர், சர்வதேச நாணய நிதியத்தினால் அனுசரணையளிக்கப்படும் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் நிபந்தனைகளுக்கு அமைவாக சில மாற்றங்களை மேற்கொள்ளமுடியும் எனவும், அத்தகைய சில மாறுதல்களுடன் தான் கடந்த வாரம் மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பான உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தினால் எதிர்வரும் ஜனவரி மாதம் வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும்போது அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் கொள்கைகளின் ஊடாக தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாறுதல்கள் எவை என்பதைப் புரிந்துகொள்ளமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேபோன்று சர்வதேச நாணய நிதியத்துடன் மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பில் உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கும் நிலையில், இதற்கு வெகுவிரைவில் சர்வதேச நாணய நிதியப் பணிப்பாளர் சபையின் அனுமதியைப் பெற்றுக்கொள்ளமுடியும் என எதிர்பார்ப்பதாகவும், நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் பிரகாரம் பொருளாதாரத்தை முன்நோக்கிக் கொண்டுசெல்வதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருப்பதாகவும் ஆளுநர் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டினார்.

பணச்சுருக்கத்தினால் பாதிப்பா?

அடுத்ததாக பணவீக்கமானது தற்போது எதிர்மறைப் பெறுமதியை அடைந்து பணச்சுருக்கமாகப் பதிவாகியிருக்கும் நிலையில், எதிர்வரும் வருடத்தின் இரண்டாம் காலாண்டில் இதனை மீண்டும் சாதக மட்டத்துக்குக் கொண்டுவரமுடியும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ‘பொதுவாக பணச்சுருக்க நிலைமை நீண்டகாலம் தொடரும் பட்சத்தில் அது பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும் எமது நாடு கடந்த காலங்களில் மிக உயர்வான பணவீக்க நிலைக்கு முகங்கொடுத்திருந்ததன் விளைவாக, அதனால் ஏற்பட்ட பாதிப்புக்களைத் தற்போதைய பணச்சுருக்க நிலைமை ஓரளவுக்கு சமநிலைப்படுத்தும். அதுமாத்திரமன்றி நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பணச்சுருக்க நிலைமை தொடர்வதற்கும் நாம் இடமளிக்கமாட்டோம்’ எனவும் தெளிவுபடுத்தினார்.

கடன்மீள்செலுத்துகையால் நெருக்கடியா?

அதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு அமைவாக கடன்மறுசீரமைப்பு செயன்முறை பூர்த்திசெய்யப்பட்டதன் பின்னர், கடன்களை மீளச்செலுத்த ஆரம்பிக்கும்போது நாடு மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என முன்வைக்கப்படும் கருத்துக்கள் தவறானவை எனச் சுட்டிக்காட்டிய மத்திய வங்கியின் ஆளுநர், கடன்களை மீளச்செலுத்த ஆரம்பிக்கும்போது எத்தகைய நெருக்கடிகளும் ஏற்படாதவண்ணமே இச்செயற்திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், அதற்குத்தான் கடன்வழங்குனர்கள் இணங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

பொருளாதார வளர்ச்சி எதிர்வுகூறல்

மேலும் இவ்வாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதமாகப் பதிவாகும் என உலக வங்கி எதிர்வுகூறியிருக்கின்ற போதிலும், அதனைவிட உயர்வாக 4.5 – 5 சதவீதம் எனும் மட்டத்தில் பொருளாதார வளர்ச்சி பதிவாகும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.