மன்னார் மாவட்டத்தில் 25க்கும் மேற்பட்ட நலன்புரி நிலையங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சம் – செல்வம் எம்.பி. நிவாரண உதவி

17 0

மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 14 ஆயிரத்து 237 குடும்பங்களைச் சேர்ந்த  49 ஆயிரத்து 560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 2100 பேர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 25 நலன்புரி நிலையங்களில்  தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களையும் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களையும் அதிகாரிகள் பார்வையிட்டு உதவிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை முன்னெடுத்து வருகின்றார். அவருடன் ரெலோ கட்சியின் மாவட்ட அமைப்பாளர் டானியல் வசந்தனும் சென்று  அவசர உதவிகளை முன்னெடுத்து வருகிறார்.

சமைத்த உணவு, உலர் உணவு பொருட்கள், குழந்தைகளுக்கான பால்மா மற்றும் நுளம்பு வலைகளை வழங்கி வருகிறார்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவிக்கையில்,

அனர்த்தத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் அதிகரித்து வருகின்றமையினால் அரசாங்கத்தின் உதவிகள் உரிய முறையில் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையாத நிலை காணப்படுகிறது.

தொடர்ச்சியாக மன்னார் மாவட்டத்தில் பாதிப்புகள் மற்றும் மக்களின் இடப்பெயர்வுகள் அதிகரித்து காணப்படுகிறமையினாலும் மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு இடர்க்கால நிலையை கருத்தில் கொண்டு ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசாங்கம் இந்த விடயத்தில் அசமந்தப் போக்குடன் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது.

மன்னாரை போன்று வவுனியா மற்றும் முல்லைத்தீவிலும் பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

எனவே, வன்னி மாவட்டத்தில் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.