வடகிழக்குப் பருவமழையை யொட்டி விருகம்பாக்கம் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார். வடகிழக்குப் பருவமழை தொடங்கி, தமிழகம் முழுவதும் பெய்துவருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணத்தால் சென்னையில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது.
இதையடுத்து சென்னை அருகம்பாக்கம் மெட்ரோ அருகில் மற்றும் கோடம்பாக்கம் கிருஷ்ணா நகர் பகுதிகளில் உள்ள விருகம்பாக்கம் கால் வாயில் நடைபெறும் தூர்வாரும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அதிகாரிகளுக்கு ஆலோசனை: அப்போது கனமழையின் போது தெருக்களில் தண்ணீர் தேங்கிவிடாமல், விருகம்பாக்கம் கால்வாய் வழியாக அதனை வெளியேற்றிட அனைத்து நடவடிக்கைகளையும் மேற் கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
தொடர்ந்து அண்ணாநகர் ஓட்டேரி நல்லா கால்வாயில் இருந்து கூவம் ஆற்றுக்கு செல்லும் இணைப்பு கால் வாயின் முகப்பு பகுதியை அகலப்படுத்தும் பணியைப் பார்வை யிட்டார். ஏற்கெனவே கடந்த மாதம் ஓட்டேரி நல்லா கால்வாயில் துணை முதல்வர் ஆய்வு செய்திருந்த நிலையில், தூர்வாரும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து ஓட்டேரி நல்லா கால்வாயில் செல்லும் புளியந்தோப்பு, திரு.வி.க.நகர் கன்னிகாபுரம் பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணி களையும் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையர் வி.சிவ கிருஷ்ணமூர்த்தி, குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், எம்எல்ஏ ஏ.எம்.வி.பிரபாகரராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.