ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக உருவாக வாய்ப்பு: டெல்டா, வட கடலோரத்தில் மிக கனமழை எச்சரிக்கை

15 0

வங்கக் கடலில் நிலை கொண்​டுள்ள ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்​பெறக்​கூடும் என தெரி​வித்​துள்ள வானிலை மையம் கடலூர், மயிலாடு​துறை மாவட்​டங்​களுக்கு அதிக​னமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை​யும் விடுத்​துள்ளது.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்​தின் தென்​ மண்​டலத் தலைவர் எஸ்.பாலச்​சந்​திரன் செய்தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தென்​மேற்கு வங்கக் கடல் பகுதி​யில் நேற்று முன்​தினம் நிலை கொண்​டிருந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்​பெற்றுள்​ளது. இது, தென்​மேற்கு வங்கக்​கடல் பகுதி​களில் இலங்கை – திரி​கோணமலை​யி​லிருந்து தென்​கிழக்கே சுமார் 310 கிமீ தொலை​விலும், நாகப்​பட்​டினத்​திலிருந்து தெற்கு தென்​கிழக்கே 590 கிமீ தொலை​விலும், புதுச்​சேரியி​லிருந்து தெற்கு தென்​கிழக்கே 710 கிமீ தொலை​விலும், சென்னையி​லிருந்து தெற்கு தென்​கிழக்கே 800 கிமீ தொலை​விலும் நிலை​கொண்​டுள்​ளது. நல்ல மேக கூட்​டங்கள் உருவாகி​யுள்​ளது.

இந்த ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டல​மானது, தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசை​யில் நகர்ந்து இன்று புயலாக வலுப்​பெறக் கூடும். இதைத் தொடர்ந்து தமிழக கடற்கரை பகுதியை நோக்கி நகரக் கூடும். இதன் காரணமாக தமிழக கடலோர பகுதி​களில் மழை தொடரும். அதன்​படி, தமிழகத்​தில் இன்று அநேக இடங்​களி​லும், புதுச்​சேரி மற்றும் காரைக்​கால் பகுதி​களி​லும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்​யக்​கூடும். கடலூர், மயிலாடு​துறை மாவட்​டங்கள் மற்றும் காரைக்​கால் பகுதி​களில் ஓரிரு இடங்​களில் அதிக​னமழை​யும் (ரெட் அலர்ட்), ஒரு சில இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், சென்னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு, விழுப்பு​ரம், அரியலூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், தஞ்சாவூர், புதுக்​கோட்டை மாவட்​டங்கள் மற்றும் புதுச்​சேரி​யில் ஓரிரு இடங்​களில் கன முதல் மிக கனமழை​யும், ராணிப்​பேட்டை, திரு​வண்ணா​மலை, கள்ளக்​குறிச்சி, பெரம்​பலூர், திருச்சி, சிவகங்கை மற்றும் ராமநாத​புரம் மாவட்​டங்​களின் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்ய வாய்ப்புள்​ளது.

சென்னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்​டங்​களின் ஓரிரு இடங்​களில் நாளை கன முதல் மிக கனமழை​யும், ராணிப்​பேட்டை, திரு​வண்ணா​மலை, கள்ளக்​குறிச்சி, கடலூர் மாவட்​டங்கள் மற்றும் புதுச்​சேரி​யில் ஓரிரு இடங்​களில் கனமழை​யும் பெய்ய வாய்ப்புள்​ளது. சென்னை, திரு​வள்​ளூர், காஞ்​சிபுரம், செங்​கல்​பட்டு மற்றும் ராணிப்​பேட்டை மாவட்​டங்​களின் ஓரிரு இடங்​களில் நவ.29-ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்​ளது.

சென்னை​யில் இன்று வானம் பொதுவாக மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்​யக்​கூடும். இன்றும், நாளை​யும் தென்​மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி​களில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 80 கிமீ வேகத்​தில் அதிகபட்​சமாக 90 கிமீ வேகத்​தில் வீசக் கூடும். எனவே, இப்பகு​தி​களுக்​கு செல்ல வேண்​டாமென​வும், ஆழ்கடலில் இருக்​கும் மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப​வும் அறிவுறுத்​தப்​படு​கிறார்​கள்.

வடதமிழக கடலோர மற்றும் அதனை ஒட்டி​யுள்ள பகுதி​கள், புதுச்​சேரி மற்றும் காரைக்​கால் பகுதி​களில் இன்றும், நாளை​யும் பலத்த தரைக்​காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்​தி​லும் இடையிடையே 60 கிமீ வேகத்​தி​லும் வீசக்​கூடும். வங்கக் கடலில் நிலை கொண்​டுள்ள ஆழ்ந்த காற்​றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்​பெறும்​போது, அது ஃபெங்கல் (fengal) என்று அழைக்​கப்​படும் என்பது குறிப்​பிடத்​தக்​கது. இதற்​கிடையே, ஆழ்ந்த காற்​றழுத்​த ​தாழ்வு மண்​டலம் ​காரணமாக சென்னை, கடலூர், நாகப்​பட்​டினம், எண்​ணூர், ​காட்டுப்​பள்ளி, புதுச்​சேரி, ​காரைக்​கால், பாம்​பன், தூத்​துக்​குடி ஆகிய 9 துறை​முகங்​களில் 1-ம் எண் புயல் எச்​சரிக்கை கூண்டு ஏற்​றப்​பட்​டு உள்​ளது.