புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வெளிப்படையாக குறிப்பிட வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒன்றை குறிப்பிட்டு விட்டு நடைமுறையில் பிறிதொன்றை செயற்படுத்துவது முறையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் குறை, நிறைகளை, இரண்டு மாத காலத்துக்குள் மதிப்பிட முடியாது.
அரசாங்கத்துக்கு உரிய காலவகாசம் வழங்க வேண்டும். நாட்டு மக்கள் புதிய மாற்றத்தை எதிர்பார்த்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நிறைவேற வேண்டும்.
நாட்டின் ஒற்றையாட்சி, மற்றும் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் அவதானத்துடன் செயற்படுவோம். ஏனெனில் நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாப்பதற்கு நாங்கள் ஆயுதமேந்தி போராடினோம். நாட்டுக்காக உயிர் நீத்த இராணுவ படைகளின் தியாகத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் ஜனாதிபதி இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுகிறார்.2015 முதல் 2019 வரை ஆட்சியில் இருந்த நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக முன்னெடுத்த பணிகளை நிறைவுப்படுத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் லால் விஜயநாயக்க தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்த புதிய அரசியலமைப்பு உருவாக்க வரைபு சமஷ்டியாட்சி உருவாக்கத்தை பரிந்துரைத்துள்ளது.
சமஷ்டியாட்சி அரசியலமைப்பின் அம்சங்களுடன் புதிய அரசியலமைப்பை உருவாக்கினால் ஒற்றையாட்சி யாப்பு இயல்பாகவே இரத்தாகும்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒன்றை குறிப்பிட்டு விட்டு, நடைமுறையில் பிறிதொன்றை செயற்படுத்துவது முறையற்றது. தேசியத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.