சீரற்ற வானிலை காரணமாக மட்டக்களப்பில் வெள்ள நீரினால் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் வெள்ளத்தினால் 161 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேர் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் பல பிரதேசங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், பல பிரதேசங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்க்கின்றன.
இந்த தொடர் மழையினால் மாவட்டதிலுள்ள பல தாழ்நில பிரதேசங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதுடன் பல பிரதேசங்களில் வீதிகளில் உள்ள பல மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
இந்த வெள்ளத்தினால் பட்டிப்பளை, காத்தான்குடி, கோரளைப்பற்று கிரான், மண்முனை வடக்கு, ஏறாவூர்பற்று செங்கலடி, பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 161 குடும்பங்களைச் சேர்ந்த 522 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளைவிட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
அதேவேளை வெள்ளத்தினால் வெல்லாவெளிக்கும் மண்டூருக்கும் இடையிலான போக்குவரத்து மற்று வவுணதீவுக்கும் மட்டக்களப்பு நகருக்கும் இடையிலான போக்குவரத்தும் கிரானுக்கும் புலிபாய்ந்தகல் பிரதேசத்துக்கும் இடையிலான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளிக்கும் மண்டூருக்குமான பிரதான தாம்போதிக்கு மேலால் வீதியை மூடி 4 அடி உயரத்தில் வெள்ள நீர் பாய்ந்து ஓடும் நிலையில் ,அதனை கடந்து செல்ல முற்பட்ட ஆண் ஒருவரை வெள்ளநீர் அடித்துச் சென்றதில் அவர் காணாமல் போயுள்ளார்.