மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் நடத்தப்படும் கலை, அறிவியல் கல்லூரி காலிப்பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பி்க்க வேண்டும் என்ற அறிவி்ப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சுகைல் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவி்ல், ‘‘மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் இருந்து கொளத்தூரில் அருள்மிகு கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அறநிலையத்துறை சார்பில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது.இந்த கல்லூரிக்கு உதவியாளர்கள், இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் உள்ளிட்ட பணியாளர்களை தேர்வு செய்ய கடந்த 2021-ம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிடபபட்டது. அதில், இப்பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இது அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு எதிரானது என்பதால் அந்த அறிவிப்பாணை ரத்து செய்து, மாற்று மதத்தவரும் விண்ணப்பிக்கும் வகையில் புதிய அறிவிப்பாணை வெளியிட உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி விவேக்குமார் சிங் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ‘‘கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி என்பது கல்வி நிறுவனம் மட்டுமே. அது மதம் சார்ந்த நிறுவனம் அல்ல. எனவே, இந்த கல்லூரிக்கு மத அடிப்படையில் எந்தப் பணி நியமனங்களையும் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட வேண்டும். இந்த பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வில் பங்கேற்க எனக்கும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’’ என கோரப்பட்டது.
அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், ‘‘அறநிலையத்துறை சட்டப்படி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியில் இருந்துதான் இந்த கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. எனவே, இந்தக் கல்லூரியும் மதம் சார்ந்த கல்வி நிறுவனமே. இந்தக் கல்லூரியை நிர்வகிக்க அரசிடமிருந்து எந்த நிதியுதவியும் பெறவில்லை.
கோயில் நிதியில் இருந்து செயல்படும் சுயநிதி கல்லூரி என்பதால் இக்கல்லூரி பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாது’’ என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கோயில் நிதியில் இருந்து நடத்தப்படும் கல்லூரி என்பதால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க இயலாது என தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவி்ட்டுள்ளார்.