சென்னை விமான நிலையத்தில் ஜிபிஎஸ் கருவி பறிமுதல்

12 0

சென்னை விமான நிலையத்தில் ஜிபிஎஸ் கருவி பறிமுதல் செய்யப்பட்டது. எத்தியோப்பியா நாட்டுக்கு கொண்டு செல்ல முயன்ற ஆந்திரா நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

சென்னையில் இருந்து எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடிஸ் அபாபா செல்லும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை புறப்பட தயாராகி கொண்டிருந்தது. பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர்.

அப்போது, விமானத்தில் பயணம் செய்ய வந்த ஆந்திர மாநிலத்தை ராமச்சந்திரா (35) என்பவரை அதிகாரிகள் சோதனை செய்த போது, அவரது கைப்பையில் ஜிபிஎஸ் கருவி இருந்தது. அவரை விசாரித்ததில், புவியியல் துறையில் பணியாற்றுவதாகவும், தனது பணிக்காக இந்த கருவியை எடுத்து செல்வதாகவும் தெரிவித்தார்.

அதனை ஏற்காத அதிகாரிகள், விமான பாதுகாப்பு சட்டத்தின்படி, ஜிபிஎஸ் கருவியை விமானத்தில் எடுத்து செல்லக்கூடாது என்று கூறி, அந்த கருவியை பறிமுதல் செய்தனர். அவரது பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரையும், ஜிபிஎஸ் கருவியையும் சென்னை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.