கடற்படை தினத்தை முன்னிட்டு சென்னை வந்துள்ள ‘ஐஎன்எஸ் டெல்லி’ போர்க் கப்பலுக்கு உற்சாக வரவேற்பு

13 0

 கடற்படை தினத்தை முன்னிட்டு, சென்னைக்கு வந்துள்ள ‘ஐஎன்எஸ் டெல்லி’ என்ற போர்க் கப்பலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் டிச.4-ம் தேதியன்று இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, இந்தியக் கடற்படை சார்பில், கடற்படை தின கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, ‘ஐஎன்எஸ் டெல்லி’ என்ற பிரம்மாண்ட போர்க் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது.

இக்கப்பலுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அலுவலகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் என்சிசி மாணவர்கள் இக்கப்பலை பார்வையிட்டனர்.

கடந்த 1997 நவ.15-ம் தேதி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்ட இக்கப்பல் 163 மீட்டர் நீளமும், 6,933 டன் எடையும் கொண்டது. ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் நவீன ஆயுதங்கள், சென்சார்கள், பிரம்மோஸ் ஏவுகணைகள், நீர்மூழ்கி ஏவுகணைகள், நவீனரக ரேடார்கள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன.

மேலும், 80 ஆயிரம் குதிரை திறனில் இயக்கப்படுவதற்காக 4 காஸ் டர்பைன்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், 4 டர்பைன்கள் மூலம் 4 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இக்கப்பல் மிலன், மலபார் மற்றும் ஜிமெக்ஸ் ஆகிய கூட்டுப் பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.

கடற்படையின் செயல்பாடுகள் மற்றும் கடல் எல்லைப் பரப்பில் மேற்கொள்ளப்பட்டு வரப்படும் பாதுகாப்பு பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இக்கப்பலின் வருகை அமைந்துள்ளது. பாதுகாப்பு துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.