அரசியல் பழிவாங்கல்களுக்காக அரசாங்கத்தால் குற்றப்புலனாய்வு திணைக்களம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது – சுஜீவ சேனசிங்க

15 0

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரசாங்கத்தால் குற்றப்புலனாய்வு திணைக்களம் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது. இது நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட அவரது சொகுசு கார் திங்கட்கிழமை (25) கோட்டை நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விடுவிக்கப்பட்டது. நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி உட்பட அரசாங்கம் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பொறுப்பு கூற வேண்டும். பொலிஸார் செயற்பட விதம் தொடர்பில் என்னிடம் மன்னிப்பு கோர வேண்டும். தேர்தலுக்கு 10 நாட்கள் இருக்கும் போது இந்த செய்தியைப் பிரசித்தப்படுத்தினர். என்னை சிக்க வைப்பதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட முயற்சிக்கு 100 இலட்சமாவது செலவு ஏற்பட்டிருக்கும்.

தொடர்ச்சியாக இவ்வாறான நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டால் இந்த நாட்டுக்கு சிறந்த எதிர்காலம் அற்றுப் போகும். நாம் நியாயமான அரசியலிலேயே ஈடுபடுவோம். எமது விமர்சனங்கள் அரசியல் ரீதியானவையாக இருக்குமே தவிர தனிப்பட்ட ரீதியிலானதாக இருக்காது. ஆனால் இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக எனது அரசியல் பயணத்தை அரசாங்கத்தால் தடுக்க முடியாது.

எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன். பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், பதவி உயர்வுகளுக்காகவும் எந்தவொரு அதிகாரியும் இவ்வாறு செயற்படக் கூடாது. அரசியல் பழிவாங்கலுக்காக முன்னெடுக்கப்பட்ட மிகவும் மோசமான செயல் இதுவாகும். அரசியல் பழிவாங்கல்களுக்கு இவ்வாறு சீ.ஐ.டி. பயன்படுத்திக் கொள்ளப்பட்டால் அது நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும் என்றார்.