மாவையின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் – ஆனந்தநடராஜா லீலாதேவி

354 0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்களின்   தொடர் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை  சேனாதிராஜா   நல்லாட்சி அரசுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது என எங்கள் முன் தெரிவித்திருந்தார். இக் கருத்தை நான்  வன்மையாக கண்டிக்கிறேன். இதனால்தான் அவர் அவ்வாறு குறிப்பிடும் போது அந்த இடத்தைவிட்டு வெளிநடப்புச் செய்தேன் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின்  இணைப்பாளர் ஆனந்தநடராஜா லீலாதேவி  தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய் கிழமை மாலை கிளிநொச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளாhர்.
நாங்கள் கடந்த எட்டு வருடங்களாக காணாமல் ஆக்கப்பட்ட எங்களின் உறவுகளுக்காக போராடிவருகின்றோம், கடந்த அரசாங்கம் போன்றே இந்த  அரசாங்கமும் எங்களின் போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை, அத்தோடு நாங்கள் யாரையெல்லாம் நம்பியிருந்தோமோ அவர்களும் எங்களை ஏமாற்றிவிட்டார்கள். முழுமையான கதவடைப்பு போராட்டம் என்பது எமது அடுத்தக் கட்ட போராட்டம் அல்ல இது மக்களுக்கு தெளிவுப்படுத்வதற்கும், அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்குமான ஒரு முன் நடவடிக்கையே, இதற்கும் எமக்கும் தீர்வு கிடைக்காது விட்டால் அடுத்தக்கட்ட போராட்டம் விரைவில் வேறு வடிவத்திற்குசெல்லும் எனத் தெரிவித்த அவர்
நல்லாட்சியில்  போராட்டங்கள் நடத்துகின்ற சூழல் நிலைகளே காணப்படுகின்றனவே தவிர வேறு எதுவும் இடம்பெறுவதாக தெரியவில்லை. மகிந்தவை காரணம் காட்டி  அரசுக்கு அழுத்தம் கொடுப்பதை நிறுத்த முடியாது, அப்படியாயின் இந்த அரசு எங்கள் பிரச்சினைகளை  கருத்தில் எடுத்து தீர்வு கண்டிருக்க வேண்டும் ஆனால் இதுவரை அதனை செய்யவில்லை. மகிந்தவின் காலத்தில் இப்படியொரு போராட்டத்தை செய்திருந்தால் ஒன்று நாங்களும் காணாமல் போயிருப்போம், அல்லது சில துக்கங்கள் துயரங்கள்  நடக்கலாம் அல்லது தீர்வு கிடைத்திருக்கும்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா எங்களிடம் தெரிவித்திருந்தார் சர்வதேச நாடுகளுடன் நாங்கள் ஒத்துபோக வேண்டும் என்றும்  இந்த அரசாங்கத்துடன் முரண்பாட்டால் பாதிப்பே ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தார் இந்த இரண்டு கருத்தையும் நான் முற்றாக  ஏற்றுக்கொள்ளவில்லை அதில் உடன்பாடும் இல்லை, வயதிற்கும் பதவிக்கும் மரியாதை கொடுத்து பழக்கப்பட்டவர்கள் அதனால்தான் அந்த இடத்தில் அவருடன் முரண்படாது வெளியேறிவிட்டேன் என்றார்
தேர்தல் காலங்களில் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனம் தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக கொடுக்கப்படுகின்ற பொய் வாக்குறுதிகளே தவிர வேறு ஒன்றுமில்லை எந்தக் கட்சியும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்தவற்றை நிறைவேற்றியதாக தெரியவில்லை  எனவே உறுதியாக ஒன்றைச் சொல்கிறேன் எமக்கு தீர்வு கிடைக்கும் வரை நாம் இந்த இடத்தை விட்டுச்செல்லப் போவதில்லை. எனவும் தெரிவித்தார்