ரணிலின் பொருளார வேலைத்திட்டம்- அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளமை மகிழ்ச்சி

43 0

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அவ்வாறே முன்னெடுத்துச்செல்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதன் மூலம்  ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார வேலைத்திட்டத்தையே அரசாங்கம் முன்னெடுத்து செல்வதை அநுரகுமார திஸாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

காலம் கடந்தேனும் அநுரகுமார திஸாநாயக்க உண்மை நிலையை உணர்ந்துகொண்டமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிரதான இரண்டு விடயங்கள்தான் பொருளாதாரம் மற்றும் தேசிய பிரச்சினை. இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும்போதுதான் எமது நாடு சுபீட்சமடைந்த நாடாக மாறும்.

அன்றுதான் இந்த நாடு அபிவிருத்தியடைந்த நாடாக மாறும். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது கொள்கை விளக்க உரையை ஆரம்பித்தது பொருளாதார பிரச்சினை தொடர்பாகவாகும்.

அதேபோன்று தேசியப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற அவர் உரையை நிறைவு செய்தார். இந்த இரண்டு விடயம் தான் எமது அரசியல் கொள்கையாக இருந்து வருகிறது. அதற்காகவே கடந்த காலங்களில் நான் அரசியல் தீர்மானம் மேற்கொண்டிருந்தேன்.

நல்லதோ கெட்டதோ நாட்டின் பொருளாதாரத்தை சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுடனே முன்னுக்கு கொண்டு செல்ல வேண்டி இருக்கிறது என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் நல்லது கெட்டது என இரண்டும் இருக்கின்றன. அதன் பிரேரணைகள் தற்போது மக்களுக்கு நல்லதாக இல்லை. மக்களுக்கு கஷ்டமானதாகும்.

ஆனால் நாணய நிதியத்தின் பிரேரணைகளை செயற்படுத்துவதன் மூலம் ஏற்படும் பொருளாதார மாற்றம் எதிர்காலத்தில் நல்லதாகும்.

வங்குராேத்து அடைந்த எந்த நாட்டுக்கும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய ஜனரஞ்சகமான தீர்மானங்களை எடுக்க முடியாமல் போயிருக்கிறது. அந்த தீர்மானங்கள் மக்களுக்கு கஷ்டமாக இருக்கும். ஆனால் நாட்டுக்கு  அது நல்லதாகும்.

ரணில் விக்ரமசிங்க அன்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே கஷ்டமான தீர்மானங்களை எடுத்தார். அதனாலே நாட்டில் இருந்துவந்த வரிசை இல்லாமல் போனது.

அதனாலே மக்களுக்கு இரண்டு வேளை உணவாவது கிடைத்தது. மக்களுக்கு இந்த உண்மை விளங்குவது காலம் கடந்த பின்னராகும்.

1956இல் சிங்களம் மட்டும் அரச கரும மொழியாக்கப்பட்டது முதலே நாடு சீரழிய ஆரம்பித்தது. அன்று எடுத்த இந்த தீர்மானம் பிழை என 40 வருடங்களுக்கு பின்னரே உணர்ந்தார்கள். அதனாலே 1994இல் சந்திரிக்கா குமாரதுங்க தமிழ், சிங்களம் இரண்டும் அரச மொழியாக பிரகடனப்படுத்தினார்.

அதேபோன்று அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைக்கும் நிபந்தனைக்கும் எதிராக தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தனர்.

போராட்டம் மேற்கொண்டனர். அதனாலே மக்கள் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களித்தனர். நாணய நிதியத்தின் நிபந்தனைக்கு எதிரான நிலைப்பாட்டிலே மக்கள் இருக்கின்றனர்.

ஆனால் நாணய நிதியத்தின் நிபந்தனை நல்லதோ கெட்டதோ அதனுடனே செல்ல வேண்டி இருப்பதாக தற்போது ஜனாதிபதி தெரிவிக்கிறார்.

தாமதித்தாவது அநுரகுமார திஸாநாயக்க இந்த உண்மையை உணர்ந்துகொண்டுள்ளதையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செல்வதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதன் மூலம் ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதார வேலைத்திட்டத்துடன் செல்கிறோம் என்பதாகும்.

ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டம் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டு, ரணில் தோல்வியடைந்தார். ஆனால் தாேற்கடிக்கப்பட்ட பொருளாதார வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுக்கிறது. இதுதான் இந்த நாட்டின் அரசியலாகும் என்றார்.