இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தினமும் காலை போக்குவரத்துக்காக திறக்கப்பட்டு மாலை 6 மணிக்கு மூடப்படும். பாதையின் போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகள், பேருந்து நடத்துனர்கள் மற்றும் பொதுமக்கள் வீதியின் அனர்த்த அபாய நிலைமையைக் கருத்திற்கொண்டு தமது சுய பாதுகாப்பை தாமே உறுதி செய்துகொண்ட பின்னர் போக்குவரத்தில் ஈடுபட வேண்டும்.
பசறை பிரதேச செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வீதி கண்காணிப்புக் குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு அவ்வீதியை தினமும் திறப்பதா அல்லது அனர்த்த அபாயம் நிலவும் சந்தர்ப்பங்களில் மூடுவதா என்பது தொடர்பாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.
நாளை ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சைக்கு இப்பாதை ஊடாக பரீட்சை நிலையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை வழங்க இ.போ.சபை மற்றும் தனியார் போக்குவரத்து நிறுவனம் என்பவற்றின் ஊடாக மேற்கொள்ள உரிய தரப்பினருடன் கலந்துரையாடி நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
திடீர் அனர்த்த நிலைமைகள் ஏற்படும்போதும் இச்செயற்பாடு நடைமுறையில் இருக்கும்.
பாதையின் பாதுகாப்பு நடைமுறைகளை செயற்படுத்தும் முழு அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த தேசிய கட்டடப் பொருள் ஆய்வு திணைக்களத்தின் அதிகாரியொருவர், எமது திணைக்கள கள ஆய்வு முடிவுகளின்படி, அப்பகுதியின் மேற்பகுதியில் உள்ள கற்பாறைகள் டிசம்பர் மாத பருவமழையின்போது தாழிறங்கும் சாத்தியங்கள் காணப்படுகின்றன. எனவே, இப்பாதையினூடாக பயணிப்போர் தமது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றார்.
இப்பாதையின் ஊடாக இரவு நேரத்தில் கொழும்பு, ஹட்டன் மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களுக்கான பேருந்து சேவைகள் இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது அவை இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.