இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளுங்கள்

9 0

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நகர்வுகளை கனேடிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தும் முன்மொழிவு அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஷோன் சென்னால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தைச்சேர்ந்த புலம்பெயர் தமிழரான நிருஜன் ஞானகுணாலனால் தயாரிக்கப்பட்டு, அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் பரந்துபட்டு வாழும் புலம்பெயர் தமிழர்கள் 636 பேர் கையெழுத்திட்டிருக்கும் ஈ-5058 இலக்க முன்மொழிவையே பாராளுமன்ற உறுப்பினர் ஷான் சென், கடந்த வாரம் (20) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இலங்கையில் தமது பாரம்பரிய தாயகமான தமிழீழத்தில் 75 வருடங்களுக்கும் மேலாக நீடித்துவரும் இனவழிப்புக்கு முகங்கொடுத்திருக்கும் ஈழத்தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் ‘புலம்பெயர்ந்தோரின் வீடாக’ கனடா திகழ்வதாகவும், இலங்கை அரசினால் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மீறப்பட்டிருப்பதாகவும் அம்முன்மொழிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி ‘1956 இல் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்திலிருந்து 2009 மேமாதம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட ‘இனவழிப்பு’ யுத்தம் வரை தமிழர்களுக்கு எதிராக அரச அனுசரணையுடன்கூடிய இனப்படுகொலை பல்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டுவந்திருக்கிறது’ எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் அதற்குப் பொறுப்புக்கூறவேண்டிய இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நகர்வுகளை கனேடிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றும், சுதந்திர தமிழீழ உருவாக்கம் தொடர்பில் இலங்கைவாழ் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டுடனான பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும் அந்த முன்மொழிவில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.