ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்குங்கள்

12 0

பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக தேர்தல் பிரசாரத்தின்போது அளித்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து செயற்படவேண்டும் என எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஊடக சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம், தகவல் சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் பிரான்ஸின் பாரிஸ் நகரைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பினால் (ரிப்போட்டர்ஸ் வித்தௌட் போர்டர்ஸ்), ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் முன்னுரிமை அளிக்கவேண்டும் என வலியுறுத்தி வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது:

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியானது கடந்த 14 ஆம் திகதி நடைபெற்றுமுடிந்த பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியீட்டிருக்கிறது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் உரியவாறு தண்டனை வழங்கப்படாததும், ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையிலான ஒடுக்குமுறைச்சட்டங்களைக் கொண்டதுமான நாட்டில் முறையான நிலைமாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கிறது.

அதற்கமைய இப்புதிய அரசாங்கமானது அவசியமான கட்டமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதுடன், தணிக்கைக்கு வழிகோலும் ஒடுக்குமுறைச் சட்டங்களை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அத்தோடு குறிப்பாக தமிழ், முஸ்லிம் சிறுபான்மையின சமூகங்களைச்சேர்ந்த ஊடகவியலாளர்கள் உள்ளடங்கலாக சகல ஊடகவியலாளர்களுக்குமான நியாயமான பாதுகாப்பு செயன்முறையை அறிமுகப்படுத்தவேண்டும்.

சுதந்திரமானதும், பாதுகாப்பானதுமான ஊடக இடைவெளியை உறுதிப்படுத்துவதாக தேர்தல் பிரசாரத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதைய புதிய பாராளுமன்றத்தில் முன்னுரிமை அளிக்கவேண்டும்.

இலங்கையின் அண்மையகால வரலாற்றில் ஊடகவியலாளர்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருப்பதுடன், அவை ஊடகங்கள் கொண்டிருக்கும் மிகமுக்கிய வகிபாகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் சார்ந்து தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு உடனடியாக முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டும்.

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு அவசியமான ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு இந்த வரலாற்று முக்கியத்தும் மிக்க வாய்ப்பை புதிய அரசாங்கம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

அதேவேளை ஊடகங்களின் சுதந்திரமான இயங்குகைக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய சர்ச்சைக்குரிய சட்டங்கள் மற்றும் சட்டமூலங்கள் நீக்கப்படுவதுடன், பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் சிவில், அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் என்பன ஊடகவியலாளர்களுக்கு எதிராகத் தவறான முறையில் பிரயோகிக்கப்படுவதை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவரவேண்டும் என அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.