ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தொடர்பில்லை என்று கனடா அரசு விளக்கம் அளித்து உள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சர்ரே நகரில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா அரசு குற்றம் சாட்டியது. இதுதொடர்பாக இருநாடுகளும் பரஸ்பரம் தூதரக அதிகாரிகளை வெளியேற்றின.
இந்த சூழலில் கனடாவின் முன்னணி நாளிதழான குளோப் அண்ட் மெயிலில் கடந்த 20-ம் தேதி ஒரு செய்தி வெளியானது. பெயர் குறிப்பிடப்படாத கனடா பாதுகாப்பு அதிகாரியை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட அந்த செய்தியில், “ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கொலை செய்யும் சதித் திட்டம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கு முன்கூட்டியே தெரியும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதரக அதிகாரிகளை மட்டுமே குற்றம் சாட்டி வந்த கனடா அரசு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை குற்றம் சாட்டியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கடும் கண்டனம் தெரிவித்தார்.
“பொதுவாக ஊடக செய்திகள் குறித்து நாங்கள் கருத்துகளை தெரிவிப்பது கிடையாது. எனினும் இதுபோன்ற அபத்தான, கேலிக்கூத்தான செய்திகளை மிக வன்மையாக கண்டிக்கிறோம். இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க சதி செய்யப்படுகிறது. இதுபோன்ற செயல்களால் இந்தியா, கனடா இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்படும்” என்று ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நதாலி ஜி ட்ரூயின் நேற்று அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:
கனடாவில் பொது அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதன்காரணமாகவே கனடாவில் நிகழ்த்தப்பட்ட கடுமையான குற்றச் செயல்களில் (நிஜ்ஜார் கொலை வழக்கு) இந்திய அரசின் முகவர்களுக்கு தொடர்பு இருக்கிறது என்று கனடா போலீஸார், அதிகாரிகள் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
கனடாவில் நிகழ்த்தப்பட்ட கடுமையான குற்றச் செயல்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு தொடர்பு இருக்கிறது என்று கனடா அரசு ஒருபோதும் கூறவில்லை. இதுதொடர்பாக ஊடகத்தில் வெளியான செய்தி ஊகமானது, தவறானது. இவ்வாறு நதாலி ஜி ட்ரூயின் தெரிவித்துள்ளார்.